
சிறுநீரகங்களைச் சிதைக்கும் ஐந்து பொதுவான காலைப் பழக்கங்கள்; இதையெல்லாம் பண்ணாதீங்க
செய்தி முன்னோட்டம்
காலை நேரமானது அன்றைய நாளுக்கான ஆரோக்கியமான அடித்தளத்தை அமைப்பதற்கு மிக முக்கியமானது என்றாலும், சில பொதுவான பழக்கங்கள் நம்முடைய சிறுநீரகங்களுக்குத் தெரியாமல் அதிகச் சுமையைக் கொடுக்கின்றன. மாற்று அறுவை சிகிச்சை நிபுணரும் ரோபோட்டிக் சிறுநீரக மருத்துவருமான டாக்டர் வெங்கட் சுப்ரமணியம், சிறுநீரகங்களைப் பாதிக்கக்கூடிய ஐந்து முக்கியக் காலை நேரத் தவறுகளை சுட்டிக் காட்டுகிறார். முதலாவதாக, காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கத் தவறுவது ஆபத்தானது. இரவு முழுவதும் உண்ணாவிரதத்திற்குப் பிறகு, உடலும் சிறுநீரகங்களும் லேசான நீர்ச்சத்து குறைபாட்டுடன் இருக்கும். எனவே, காபி அல்லது டீக்குச் செல்வதற்குப் பதிலாக, குறைந்தபட்சம் ஒரு கிளாஸ் தண்ணீருடன் நாளைத் தொடங்க வேண்டும் என்று டாக்டர் வெங்கட் அறிவுறுத்துகிறார்.
பாதிப்பு
சிறுநீரகங்களுக்கும் சிறுநீரக பாதைகளுக்கும் பாதிப்பு
இரண்டாவது, சிறுநீரை நீண்ட நேரம் அடக்கிக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இரவு முழுவதும் சிறுநீரை அடக்கி வைத்ததால், சிறுநீர்ப்பை ஏற்கனவே நீட்சியடைந்திருக்கும். காலையில் மட்டுமல்லாது, பகலிலும் நீண்ட நேரம் சிறுநீரை அடக்குவது சிறுநீரகங்களையும் சிறுநீர்ப் பாதையையும் பாதிக்கலாம். மூன்றாவது, வலி நிவாரணி மாத்திரைகளை வெறும் வயிற்றில் உட்கொள்வது சிறுநீரகச் சேதத்தின் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்த மருந்துகளை எப்போதும் மருத்துவரின் ஆலோசனையின்படி, உணவுடனோ அல்லது தண்ணீருடனோ மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சிக்கு பின் நீரேற்றம்
நான்காவது, காலையில் உடற்பயிற்சி செய்வது நல்லது என்றாலும், உடற்பயிற்சிக்குப் பிறகு போதுமான அளவு நீரேற்றம் செய்யாமல் இருப்பது நீர்ச்சத்து குறைபாடு தொடர்பான அழுத்தத்தைச் சேர்க்கிறது. உடற்பயிற்சிக்குப் பின் நச்சுக்களை வெளியேற்றவும், சிறுநீரகங்கள் திறம்படச் செயல்படவும் தண்ணீர் அவசியமாகும். கடைசியாக, காலை உணவைத் தவிர்ப்பது தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில், காலை உணவைத் தவிர்ப்பதால் அதிக உப்பளவை கொண்ட நொறுக்குத் தீனிகளைச் சாப்பிட நேரிடுகிறது. இது அதிக சோடியம் உட்கொள்ளல் காரணமாகச் சிறுநீரகங்களுக்கு அதிகச் சுமையை அளிக்கிறது. இந்த எளிய குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்த முக்கிய உறுப்புகளைப் பாதுகாக்கலாம்.