
எலும்பின் வலிமைக்கு வெறும் பால் போதாது; ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வதைக் கேளுங்க
செய்தி முன்னோட்டம்
நாள் முழுவதும் பால் குடிப்பது மட்டுமே வலுவான எலும்புகளின் ரகசியம் என்ற நீண்ட காலமாகக் நிலவும் கருத்து, இப்போது மருத்துவ நிபுணர்களால் மறுக்கப்படுகிறது. பாலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி இருந்தாலும், வயது அதிகரிக்கும்போது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கப் பலதரப்பட்ட ஊட்டச்சத்துக்கள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சிகள் கொண்ட ஒரு விரிவான அணுகுமுறை அவசியம் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆர்டிமிஸ் மருத்துவமனையின் ஆர்த்தோ முதுகெலும்பு ஆலோசகர் டாக்டர் தீரஜ் படேஜா கூறுகையில், வெறும் பால் மட்டுமே அருந்துவது, எலும்புகளுக்குத் தேவையான மற்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை நாம் தவறவிட வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறார்.
விட்டமின் டி
கால்சியத்திற்கு அவசியமான விட்டமின் டி
உடலில் கால்சியத்தை சரியாக உறிஞ்சிக்கொள்ள வைட்டமின் டி அவசியம். இதைச் சூரிய ஒளி, கொழுப்பு நிறைந்த மீன் மற்றும் முட்டைகள் மூலமாகவும் பெறலாம். கால்சியம் பாலில் மட்டுமின்றி, தயிர், சீஸ், கீரைகள் (பசலைக்கீரை, கேல்), டோஃபு, பாதாம் மற்றும் எள் போன்ற பல மாற்று உணவுகளிலும் நிறைந்துள்ளது. எலும்புகள் வலுவாக இருக்க, கால்சியம் மற்றும் வைட்டமின் டி தவிர, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களும் தேவை. இவை முழு தானியங்கள், விதைகள் மற்றும் பச்சைக் காய்கறிகளில் கிடைக்கின்றன. சமச்சீரான உணவுடன், நடைபயிற்சி, ஜாகிங், நடனம் போன்ற உடற்பயிற்சிகள் எலும்பு உருவாக்கத்தைத் தூண்டி, எலும்பு இழப்பைக் குறைக்க உதவுகின்றன.