
இந்தியாவில் அதிகரிக்கும் இதய நோய்; அலட்சியப்படுத்தக் கூடாத எச்சரிக்கை அறிகுறிகள் என்னென்ன?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் சுமார் 28% இதய நோய்களால் ஏற்படுகிறது. இருப்பினும், பெரும்பாலான மக்கள் அதன் ஆரம்ப அறிகுறிகளை அலட்சியம் செய்கின்றனர். சோர்வு, மூச்சுத் திணறல் மற்றும் அசௌகரியம் போன்ற நுட்பமான அறிகுறிகள், பெரும்பாலும் கவனிக்கப்படாமல் விடப்படுகின்றன. இவை, ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மருத்துவ நிபுணர்கள் கூறுவாதப்படி, இந்தியாவில் நோயாளிகள் பெரும்பாலும் தாமதமாகவே மருத்துவமனைக்கு வருவதால், இதுபோன்ற ஆரம்ப அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும்.
அறிகுறிகள்
பொதுவாக மற்ற உடல்நலக் கோளாறுகளாகக் கருதப்படும் சில அறிகுறிகள்
மார்பில் அசௌகரியம்: இதயக் கோளாறுகளின் ஆரம்பக்கட்டத்தில் மார்பில் கடுமையான வலி இருக்காது, மாறாக ஒருவித இறுக்கம் அல்லது கனமான உணர்வு ஏற்படும். இது அமிலத்தன்மை அல்லது பதற்றத்தால் வருவதாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. சகிப்புத்தன்மை குறைதல்: சிறிது தூரம் நடந்தாலே மூச்சுத் திணறல் ஏற்படுவது அல்லது மாடிப்படிகளில் ஏறும் திறன் குறைவது முதுமையின் அறிகுறி எனப் பலர் நினைக்கின்றனர். ஆனால், இது இதயச் செயலிழப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். நீடித்த சோர்வு: ஓய்வெடுத்த பிறகும் சோர்வு குறையவில்லை என்றால் அது இதயத்தின் செயல்திறன் குறைவதற்கான அறிகுறியாக இருக்கலாம். சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி, இந்தியாவில் பணிபுரியும் மக்களில் பலர் இந்த அறிகுறியைப் பொருட்படுத்துவதில்லை.
அறிகுறிகள்
பொதுவாக மற்ற உடல்நலக் கோளாறுகளாகக் கருதப்படும் சில அறிகுறிகள்
படபடப்பு: இதயம் வேகமாகவோ அல்லது ஒழுங்கற்றதாகவோ துடிப்பது, படபடப்பு என அழைக்கப்படுகிறது. இது பதற்றம் காரணமாக இருக்கலாம் எனப் பலர் நினைக்கின்றனர். ஆனால் இது அரித்மியா (arrhythmia) என்ற இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். இது பக்கவாதம் மற்றும் இதயச் செயலிழப்புக்கான அபாயத்தை அதிகரிக்கிறது. கால் மற்றும் கணுக்கால் வீக்கம்: மாலை நேரங்களில் கால் மற்றும் கணுக்கால்களில் ஏற்படும் வீக்கத்தை உணவில் உள்ள குறைபாடுகளால் வந்ததாகப் பலர் நினைக்கின்றனர். ஆனால், இது இதயச் செயலிழப்புக்கான ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். இத்தகைய அறிகுறிகளைக் கண்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது, எதிர்காலத்தில் ஏற்படும் பெரிய சிக்கல்களைத் தடுக்க உதவும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.