இயர் பட்ஸ் உண்மையில் காது குடைவதற்கு கிடையாதாம்! உண்மையாக எதற்கு பயன்படுத்தணும்னு தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தங்களது காதுகளை சுத்தம் செய்வதற்காக 'இயர் பட்ஸ்' (Earbuds) எனப்படும் பஞ்சு உருண்டைகள் பொருத்தப்பட்ட குச்சிகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், வியப்பான விஷயம் என்னவென்றால், எந்தவொரு முன்னணி நிறுவனத்தின் இயர் பட்ஸ் பாக்கெட்டை எடுத்து அதன் பின்புறம் பார்த்தாலும், அங்கொரு எச்சரிக்கை அச்சிடப்பட்டிருக்கும். "காது கால்வாய்க்குள் இதை நுழைக்கக் கூடாது" (Do not insert into the ear canal) என்ற அந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ எச்சரிக்கையை பெரும்பாலான மக்கள் கவனிப்பதே இல்லை.
காரணம்
காதை சுத்தம் செய்ய இயர் பட்ஸ் ஏன் உகந்தது அல்ல?
மருத்துவ ரீதியாக, இயர் பட்ஸ் என்பது காதுக்கு வெளியே இருக்கும் மடல்களை சுத்தம் செய்யவும், மேக்கப் கலைப்பதற்கும், மருந்து தடவுவதற்கும் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.
காதுக்குள் இருக்கும் மெல்லிய துவாரத்திற்குள் இதை நுழைக்கும் போது, அது காது அழுக்கை (Earwax) வெளியே எடுப்பதற்குப் பதிலாக, காதின் உட்பகுதி நோக்கி மேலும் ஆழமாகத் தள்ளி விடுகிறது.
இவ்வாறு அழுக்கு உள்ளே தள்ளப்படுவதால், அது காது கேளாமை மற்றும் காது அடைப்பு போன்ற தீவிரப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
பாதுகாப்பு அரண்
காது அழுக்கு என்பது கழிவு அல்ல; ஒரு பாதுகாப்பு அரண்
மனித உடலின் இயற்கையான அமைப்பின்படி, காதில் சுரக்கும் மெழுகு போன்ற திரவம் (Earwax) ஒரு கழிவுப் பொருள் அல்ல.
அது வெளிப்புறத் தூசிகள், பூச்சிகள் மற்றும் பாக்டீரியாக்கள் காதின் உட்பகுதிக்கு செல்லாமல் தடுக்கும் ஒரு பாதுகாப்பு அரணாகும்.
நாம் பேசும்போதும், உணவை மெல்லும்போதும், காதின் தசையசைவுகள் மூலம் இந்த பழைய மெழுகு தானாகவே நகர்ந்து காதுக்கு வெளியே வந்துவிடும். எனவே, அதை நாமாக வலுக்கட்டாயமாகக் குடைந்து எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
மருத்துவ அபாயங்கள்
இயர் பட்ஸ் பயன்படுத்துவதால் ஏற்படும் தீவிர மருத்துவ அபாயங்கள்
இயர் பட்ஸ் குச்சிகளை காதின் ஆழத்திற்குள் செலுத்தும்போது, அது காதுக்குள் இருக்கும் மிக மென்மையான 'காது ஜவ்வு' (Eardrum) பகுதியை எளிதில் கிழித்துவிடக் கூடும்.
ஜவ்வு கிழிந்தால் கடுமையான வலி, சீழ் வடிதல் மற்றும் நிரந்தர காது கேளாமை போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், பட்ஸில் உள்ள பஞ்சு இழைகள் காதுக்குள் தங்கிவிடுவதால், அங்கு பூஞ்சை (Fungal infection) மற்றும் பாக்டீரியா தொற்று ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சரியான முறை
காதை சுத்தம் செய்ய மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முறை
காதின் உட்பகுதியை சுத்தம் செய்ய எந்தவொரு கூர்மையான பொருட்களையோ அல்லது இயர் பட்ஸையோ பயன்படுத்தக் கூடாது என்பதே பொதுநல மருத்துவர்களின் ஒருமித்த கருத்தாகும்.
குளித்து முடித்த பின்பு காதுக்கு வெளியே இருக்கும் ஈரப்பதம் மற்றும் அழுக்குகளை ஒரு மென்மையான துணியைக் கொண்டு துடைப்பதே போதுமானது.
காதில் அதிகப்படியான அழுக்கு சேர்ந்து அடைப்பு அல்லது வலி ஏற்பட்டால், சுய மருத்துவம் செய்யாமல் ஒரு இ.என்.டி (ENT) மருத்துவரை அணுகி சொட்டு மருந்து அல்லது பாதுகாப்பான கருவிகள் மூலம் சுத்தம் செய்வதே சாலச் சிறந்தது.