பழுத்த மாம்பழத்தில் செய்யக்கூடிய 5 சுவையான உணவுகள், செய்முறைகளை தெரிந்துகொள்ளுங்கள் !
செய்தி முன்னோட்டம்
மாம்பழம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? அதன் அசாத்திய சுவை காரணமாகவே அதனைப் 'பழங்களின் ராஜா' என்று அழைக்கிறோம். பொதுவாகவே கோடைக்காலம் வந்துவிட்டாலே, சந்தைகளில் மாம்பழத்திற்கான மவுசும் தேவையும் பல மடங்கு அதிகரித்துவிடும். இப்பொழுது, உங்களிடம் நல்ல பழுத்த மாம்பழங்கள் நிறைய இருக்கிறது என்றால், அதனை அப்படியே சாப்பிட்டுத் தீர்க்காமல் பல விதமான சுவையான உணவுகளாகச் செய்து அசத்தலாம். இது உங்களுடைய வழக்கமான சாப்பாட்டுச் சுவையை இன்னும் கூட்டுவதோடு, குழந்தைகளுக்கு ஒரு சிறந்த மாலை நேர இனிப்பு உணவாகவும் (Dessert) அமையும். வாருங்கள், நம் வீட்டிலேயே மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய சில பழுத்த மாம்பழ ரெசிபிகளையும், அவற்றின் எளிய செய்முறைகளையும் இப்பொழுது விரிவாகப் பார்க்கலாம்.
#1
பழுத்த மாம்பழ அல்வா
முதலில் பழுத்த மாம்பழத்தின் தோலை நீக்கி, சதைப்பகுதியை மென்மையான கூழாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கடாயில் நெய் விட்டு, இந்த மாம்பழக் கூழைச் சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்குங்கள். கூழ் ஓரளவிற்கு வெந்து கெட்டியானதும், அதனுடன் ரவை, பால், கண்டென்ஸ்டு மில்க், சர்க்கரை மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து கைவிடாமல் நன்கு கிளறுங்கள். அடுத்து, இதனுடன் கசகசாவைச் சேர்த்து, அல்வா கடாயில் ஒட்டாமல் திரண்டு வரும் வரை நன்றாக வேகவிட்டு இறக்குங்கள். விருப்பப்பட்டால், மேலே பொடியாக நறுக்கிய பாதாம் மற்றும் பிஸ்தா துண்டுகளைத் தூவி அலங்கரித்துச் சூடாகப் பரிமாறலாம். இந்த மாம்பழ அல்வா உங்கள் சுவை மொட்டுகளைத் தூண்டும் ஒரு அருமையான இனிப்பு வகையாகும்.
#2
பழுத்த மாம்பழ ஊறுகாய்
முதலில் பழுத்த மாம்பழங்களைச் சிறிய துண்டுகளாக வெட்டி, தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு நாள் முழுவதும் வெயிலில் நன்றாகக் காய வையுங்கள். ஒரு கடாயில் கடுகு எண்ணெயைச் சூடுபடுத்தி, அதில் வெந்தயம், சோம்பு, கருஞ்சீரகம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்குங்கள். மசாலா வாசனை வந்ததும், காய வைத்துள்ள மாம்பழத் துண்டுகள் மற்றும் காரத்திற்கு மிளகாய்த்தூள் சேர்த்து மசாலா எல்லா இடங்களிலும் படுமாறு நன்கு கிளறி இறக்குங்கள். இந்த ஊறுகாயை முழுமையாக ஆறவைத்து ஒரு சுத்தமான கண்ணாடி பாட்டிலில் மாற்றி, 2-3 நாட்கள் வெயிலில் வைத்து எடுத்த பிறகு சுவைக்கலாம்.
#3
பழுத்த மாம்பழ சட்னி
முதலில் பழுத்த மாம்பழத்தைச் சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, காரத்திற்குப் பச்சை மிளகாய், பூண்டு மற்றும் சிறிய துண்டு இஞ்சி ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். பின்னர், தேவையான அளவு உப்பு, தனியா தூள், சீரகத்தூள் மற்றும் புளிப்பிற்கு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இப்போது, இந்தக் கலவையை அப்படியே மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல் மையாக அரைத்து எடுத்தால் சுவையான மாம்பழச் சட்னி தயார்! இதனை பரோட்டா, சப்பாத்தி அல்லது சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
#4
பழுத்த மாம்பழ சர்பத்
கோடைக்காலத்தில் ஜில்லென்று ஒரு சர்பத் குடிப்பது அலாதியான சுவையையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கும். இதனைத் தயாரிக்க, முதலில் பழுத்த மாம்பழத்தின் சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்து, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர், அந்த மாம்பழக் கூழுடன் சிறிதளவு புதிய எலுமிச்சை சாறு, தேவையான அளவு சர்க்கரை மற்றும் குளிர்ந்த தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். விருப்பப்பட்டால், கூடுதல் நறுமணத்திற்குச் சில புதினா இலைகளையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது, இந்த சுவையான கலவையை ஒரு டம்ளரில் ஊற்றி, ஐஸ் கட்டிகள் (Ice cubes) சேர்த்து குளிர்ச்சியாகப் பரிமாறுங்கள். இந்த மாம்பழ ஷர்பத் நாவிற்குச் சுவையாக இருப்பதுடன், கோட வெயிலுக்கு உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
#5
பழுத்த மாம்பழ குல்பி
முதலில், பழுத்த மாம்பழத்தின் சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் மையாக அரைத்துக்கொள்ளுங்கள். இந்த மாம்பழக் கூழுடன் சம அளவு ஃப்ரெஷ் க்ரீம், இனிப்பிற்கு கண்டென்ஸ்டு மில்க் மற்றும் நல்ல நறுமணத்திற்கு ஏலக்காய்த்தூள் சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்து, இந்த மாம்பழக் கலவையை குல்பி அச்சுகளில் ஊற்றி மூடி, நன்றாக உறைவதற்காக ஃப்ரீசரில் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் வரை வையுங்கள். குல்பி முழுமையாக உறைந்து செட் ஆனதும், அச்சுகளிலிருந்து மெதுவாக வெளியே எடுத்து, பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா தூவி குளிர்ச்சியாகப் பரிமாறுங்கள். இந்தச் சுவையான மாம்பழக் குல்பி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அப்படியே கவரும்.