சர்வதேச மகளிர் தினம் 2025: மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாட சில டிப்ஸ்
செய்தி முன்னோட்டம்
சர்வதேச பெண்கள் தினம் ஆண்டுதோறும் மே மாதம் 8 ஆம் தேதி கொண்டாடப்படும்.
இந்த நாள் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையிலான சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கும், பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் கொண்டாடப்படுகிறது
அந்த நாளின் பெண்மையின் மகத்துவத்தை போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம்.
எனினும் எப்போதும் போல கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் என போர் அடிக்காமல் அந்த நாளில் நம்மை சுற்றி இருக்கும் பெண் சக்திகளை எப்படி வித்தியாசமாகவும், அழகாகவும், உணர்வுபூர்வமாகவும் கொண்டாடுவது என நீங்கள் யோசித்து கொண்டிருந்தால், இந்த கட்டுரை உங்களுக்கு தான்.
பெண்கள் தினத்தை வித்தியாசமாக கொண்டாட சில டிப்ஸ் உங்களுக்காகவே இதோ.
சமத்துவம்
பணியிடத்தில் பாலின சமத்துவத்தை ஆதரிக்கவும்
சமுதாயத்தில் பாலின சமத்துவத்தை நிலைநாட்ட, அடிப்படை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
பெண் ஊழியர்களுக்கு சரிசமமான நல்ல வேலை வாய்ப்புகள் மற்றும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த, பணியிடத்தில் உறுதிப்படுத்தப்பட்ட பாலின சமத்துவ கொள்கைகள் அமைப்பது அவசியமாகிறது.
இந்த சர்வதேச மகளிர் தினத்தில், உங்கள் நிறுவனத்தின் கொள்கைகளை பரிசோதித்து கீழ்க்காணும் கொள்கைகளை செயல்படுத்துவது சிறந்தது: ஊழியர்களுக்கு பயிற்சி வழங்குதல், தலைமைப் பதவிகளில் பெண்களை முன்னேற்றுவது, பெண்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சிகளை வழங்குவது, வணிகம், கல்வி, சுகாதாரம் மற்றும் அரசியலில் பெண்களை சமமாக மதிப்பது போன்ற கொள்கைகளை பின்பற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
கலந்துரையாடல்
ஆன்லைனில் கலந்துரையாடலாம்
பெண்கள் தங்கள் அலுவலுகத்திலோ, சமூகத்திலோ இருக்கும் சக பெண்களுக்கு தங்கள் வாழ்க்கை மற்றும் துறை சார்ந்த அனுபவங்களை மற்றும் அறிவுரைகளைப் பகிர்ந்து கொள்வதும் ஒரு உத்வேகம் தரும் மாற்றாக இருக்கும்.
பெண்கள் தினசரி சந்திக்கும் இன்னல்கள் அதை கடக்க அவர்கள் அவர்களுக்கு சக்தி அளிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும்.
உலகமே கைக்கு அடக்கமாக சுருங்கி விட்டதால், ஆன்லைன் மூலமாக கூட இணைந்து கலந்துரையாடலாம்.
உங்கள் குழுவில் புதிதாக தொழில் முனைவோர்கள் எவரேனும் இருந்தால் அவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் வகையில் உரையாடலை கொண்டு செல்லலாம்.
பெண் தொழில் முனைவோர்களை ஆதரித்து, சமமான பிரதிநிதித்துவம் அளித்தல், பொருளாதார அதிகாரம் வழங்குவது போன்றவை அவர்களுக்கான பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
பெண்ணியத்தை பாராட்டுவோம்
வாசகர் வட்டத்தை உருவாக்குதல், பெண்ணிய திரைப்படங்களை திரையிடுதல்
உலகெங்கும் பெண்கள் எதிர்கொள்கிற சவால்களை புரிந்துகொள்வது, பாலின சமத்துவத்தை ஆதரிப்பதில் முக்கியமான படி ஆகும்.
இந்த வருடம் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட, பெண்களின் பிரச்சனைகள், அதிகாரமளித்தல் மற்றும் சாதனைகள் குறித்து உங்கள் குழுவில் ஒரு வாசகர் வட்டத்தை தொடங்கலாம்.
இதில், மலாலா யூசுப் சாய் மற்றும் கிறிஸ்டினா லாம்ப் எழுதிய புத்தகங்கள், சிமாமண்டா என்கோசி ஆதிச்சி எழுதிய "நாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்" போன்ற புத்தகங்களை பற்றி பேசலாம்.
அதேபோல, சினிமாவில் பாலின விதிமுறைகள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் போன்றவற்றை பிரதிநிதித்துவப்படுத்திய படங்களை உங்கள் குழுவுடன் காணலாம்.
பெண் இயக்குநர்களின் படங்களை அல்லது பெண்களை மையமாகக் கொண்ட நடிகர்களை களமிறுத்திய படங்களை உங்கள் குழுவுடன் காணலாம்.
நன்கொடை
தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்குவது
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவனை இழந்த பெண்கள், குடும்பத்தினரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கு ஆதரவு வழங்கும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கலாம்.
இந்த நல்ல காரியத்தை பெண்கள் தினத்தன்று என நிறுத்தி விடாமல், தொடர்ந்து ஆதரவை வழங்குவது அவர்கள் வாழ்க்கையிலும் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
பெண்ணியம் போற்றுவோம் என்பதை வாழ்க்கை முழுவதும் கடைபிடிப்பது சிறந்த மனிதத்தை காட்டுகிறது!
அங்கீகாரம்
உங்கள் வாழ்க்கையின் அங்கமாக இருக்கும் பெண்களை அங்கீகரித்தல்
சர்வதேச மகளிர் தினத்தில் நீங்கள் பெண்களுக்கு தரும் மிகப்பெரிய பரிசு, அவர்களை அங்கீகரித்தல்.
உங்கள் வாழ்க்கையில் அவர்களின் உன்னதமான பங்களிப்பை அங்கீகரித்தல் அவர்களுக்கு நீங்கள் தரும் மகிழ்ச்சியான பரிசாக இருக்கும்.
அந்த பெண், உங்கள் தாயாகவோ, சகோதரியாகவோ, காதலியாகவோ, மனைவியாகவோ, தோழியாகவோ அல்லது சக பணியாளராகவோ இருக்கலாம்.
ஆனால், அவர்களின் உழைப்பையும், அவர்களின் அர்ப்பணிப்பையும் நீங்கள் உணர்கிறீர்கள், அதை மதிக்கிறீர்கள் என்பதை தாண்டி பெண்கள் பெரிதாக உங்களிடம் வேறு எதிர்பார்ப்பை கொண்டிருக்க மாட்டார்கள்.
இன்றைய சமூகத்தில் ஆண்- பெண் இருவருக்கும் இடையே புரிதல் இல்லாததற்கு முக்கிய காரணியே இந்த அங்கீகாரம் இல்லாதது தான்.
இந்த பெண்கள் தினத்தில் அந்த மாற்றத்தை கொண்டு வருவோம்.. பெண்ணியம் போற்றுவோம்!