உங்களுக்கு வட்டமான முகமா? அதற்கேற்றாற்ற கொண்டை அலங்காரங்கள் உங்களுக்காக
செய்தி முன்னோட்டம்
தலை முடியை கொண்டை போடுவது என்பது ஒரு அழகான மற்றும் வசதியான ஹேர் ஸ்டைல். உருண்டை முகம் உள்ளவர்கள் சரியான முறையில் கொண்டை போடும்போது, அது அவர்களின் முக அமைப்பை இன்னும் அழகாக காட்டும். உருண்டை முகத்திற்கு பொருந்தும் ஐந்து வகையான கொண்டை ஸ்டைல்களை பற்றி இங்கே பார்ப்போம். இவை பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, மிக எளிதாக செய்யக்கூடியவை.
ஸ்டைல் 1
ஹை டாப் நாட் பன்
இந்த வகை கொண்டை உருண்டை முகத்தை சற்று நீளமாக காட்ட உதவும். கொண்டையை தலையின் உச்சி பகுதியில் போடும்போது, அது மற்றவர்களின் பார்வையை மேல்நோக்கி திருப்பும். இதனால் முகம் ஒல்லியாகவும், நீளமாகவும் தெரியும். நடுத்தரமான அல்லது நீளமான முடி உள்ளவர்களுக்கு இது நன்றாக இருக்கும். சில ஹேர் பின்கள் அல்லது ரப்பர் பேண்ட் கொண்டு இதை எளிதாகப் போட்டுவிடலாம்.
ஸ்டைல் 2
லோ சிக்னான் பன்
இது ஒரு நேர்த்தியான மற்றும் நாகரீகமான தேர்வாகும். கழுத்தின் பின்புறம் கீழே இறக்கி போடப்படும் இந்தக் கொண்டை, முகத்திற்கு ஒரு தனி அழகைத் தரும். அலுவலகக் கூட்டங்கள் அல்லது முக்கியமான விசேஷங்களுக்குச் செல்லும்போது இந்த ஸ்டைல் மிகவும் பொருத்தமாக இருக்கும். முகத்தின் ஓரங்களில் சில முடிகளைத் தளர்வாக தொங்கவிடுவது இன்னும் அழகாக இருக்கும்.
ஸ்டைல் 3
மெஸ்ஸி பன்
நண்பர்களுடன் வெளியில் செல்லும்போதோ அல்லது சாதாரணமாக இருக்கும்போதோ இந்த ஸ்டைல் நன்றாக இருக்கும். முடியைச் சற்றுத் தளர்வாகக் கலைத்துவிட்டு, பின் தலையில் ஒரு கொண்டை போட வேண்டும். இப்படித் தலையின் மேல் பகுதியில் முடி அடர்த்தியாகத் தெரிவது உருண்டை முகத்திற்கு ஒரு நல்ல தோற்றத்தைத் தரும். இது பார்ப்பதற்கு மிகவும் இயல்பாக இருக்கும்.
ஸ்டைல் 4
பிரைடட் பன்
முடியைச் சடையாக பின்னி, பிறகு அதை ஒரு கொண்டையாக சுற்றுவது உருண்டை முகத்திற்கு பொருத்தமாக இருக்கும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப முடியை சில பகுதிகளாகப் பிரித்து பின்னி, பிறகு அதை உயரமாகவோ அல்லது தாழ்வாகவோ கொண்டையாக மாற்றலாம். இது கூந்தலுக்கு ஒரு புதிய தோற்றத்தைத் தருவதோடு, நாள் முழுவதும் முடி கலையாமல் இருக்கவும் உதவும்.
ஸ்டைல் 5
சைட் ஸ்வெப்ட் பன்
இந்த வகை கொண்டையை தலையின் நடுப்பகுதியில் போடாமல் ஒரு பக்கமாகச் சரித்துப் போட வேண்டும். இது உருண்டை முகத்தின் நேர்க்கோட்டு அமைப்பை மாற்றிக் காட்டும். நீங்கள் பார்ப்பதற்கு அழகாகவும், கம்பீரமாகவும் தெரிய விரும்பினால், இந்த தேர்வை முயற்சி செய்யலாம். இது உங்கள் தோற்றத்திற்கு ஒரு தனித்தன்மையை தரும்.