டெங்குவுக்கு உலகிலேயே முதல் ஒற்றை டோஸ் தடுப்பூசி: பிரேசில் அங்கீகாரம் வழங்கி சாதனை
செய்தி முன்னோட்டம்
உலகம் முழுவதும் டெங்கு பாதிப்புகள் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ள நிலையில், பிரேசில் நாட்டின் புகழ்பெற்ற புட்டன்டன் நிறுவனம் உருவாக்கிய டெங்குவுக்கான முதல் ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது உலக சுகாதாரத் துறையில் ஒரு பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. பிரேசிலின் சுகாதார ஒழுங்குமுறை அமைப்பான ANVISA, புட்டன்டன்-DV (Butantan-DV) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தடுப்பூசியை 12 முதல் 59 வயதுடையவர்களுக்குப் பயன்படுத்த அங்கீகாரம் அளித்துள்ளது. தற்போது உலகளவில் கிடைக்கும் ஒரே டெங்கு தடுப்பூசி TAK-003 ஆகும். ஆனால், அதை மூன்று மாத இடைவெளியில் இரண்டு டோஸாகச் செலுத்த வேண்டும்.
செயல்திறன்
91.6% செயல்திறன்
ஆனால், பிரேசில் எட்டு ஆண்டுகள் ஆய்வு செய்து உருவாக்கியுள்ள இந்த ஒற்றை டோஸ் தடுப்பூசி, வேகமான மற்றும் எளிமையான தடுப்பூசி செயல்திட்டத்தை செயல்படுத்த உதவும். சாவோ போலோவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய புட்டன்டன் நிறுவனத்தின் இயக்குநர் எஸ்பெர் கல்லாஸ், "இது பிரேசிலிய அறிவியல் மற்றும் சுகாதாரத் துறையில் ஒரு வரலாற்றுச் சாதனை. பல தசாப்தங்களாக நம்மை வாட்டி வதைக்கும் இந்த நோயை இப்போது ஒரு சக்திவாய்ந்த ஆயுதம் கொண்டு எதிர்த்துப் போராட முடியும்" என்று உற்சாகத்துடன் தெரிவித்தார். 16,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுடன் நடத்தப்பட்ட மருத்துவச் சோதனைகளில், இந்தத் தடுப்பூசி தீவிரமான டெங்கு பாதிப்புக்கு எதிராக 91.6 சதவிகித செயல்திறனைக் காட்டியுள்ளது.