இட்லி, தோசைக்கு மாற்றான சுவைமிக்க காலை உணவு ரெசிபி
Newsbytes'ன் உணவுக் குறிப்புகள் : தமிழ்நாடு மாநில மக்களை பொறுத்தவரையில் காலை உணவு என்றாலே முதலில் நினைவிற்கு வருவது இட்லி, தோசை தான். இதனிடையே தினமும் இட்லி, தோசையினை காலை அல்லது இரவு நேர உணவாக எடுத்துக்கொள்வோருக்கான மாற்று காலை உணவினை எப்படி செய்வது? என்பதை தான் நாம் இந்த செய்திக்குறிப்பில் காணவுள்ளோம். ஒரே வகையான உணவு வகைகளை உட்கொண்டு வெறுப்படைந்தவர்கள் இந்த சுவையான ரெசிபியை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
ரெசிபி செய்ய தேவையான பொருட்கள்
ரவா - 1 கப் தயிர் - 1 கப் கடுகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/4 டீஸ்பூன் எண்ணெய் - 4 டீஸ்பூன் மிளகாய் பொடி - 1 டீஸ்பூன் சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன் கரம் மசாலா - 1/4 டீஸ்பூன் தனியா தூள் - 1/2 டீஸ்பூன் வெங்காயம் - 1 இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை கொத்தமல்லி ப.மிளகாய் - 1 உ.கிழங்கு - 2 உப்பு - தே.அளவு பேக்கிங் சோடா - 1 பின்ச்
ஸ்டஃப்பிங்க் மசாலா தயாரிக்கும் முறை
எடுத்து வைத்துள்ள ஒரு கப் ரவையில், ஒரு கப் புளிக்காத தயிரினை கலந்து நன்கு கிளறவும். பின்னர், அதில் அதேஅளவிலான ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்துவிட்டு பத்துநிமிடம் அப்படியே வைத்துவிடுங்கள். பின்னர், அடுப்பில் கடாயினை வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய்யை ஊற்றுங்கள். எண்ணெய் காய்ந்த பின்னர் அதில் கடுகு - 1/2 டீஸ்பூன், சீரகம் - 1/4 டீஸ்பூன் சேர்த்து பொறிந்து வந்த பிறகு சிறிது கறிவேப்பிலையை சேர்த்து கொள்ளுங்கள். அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தினை போட்டு வதக்கவும். அது ஓரளவு வதங்கிய பின்னர், இஞ்சிப்பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய ப.மிளகாய் ஆகியவற்றை சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும்.
ரெசிபி செய்ய தேவையான மசாலா பொருட்கள்
மேற்கூறிய அனைத்து பொருட்களும் நன்கு வதங்கி வந்த நிலையில், தனியா தூள் - 1/2 டீஸ்பூன், மிளகாய் பொடி - 1/2 டீஸ்பூன், மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன், சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன், கரம் மசாலா - 1/4 டீஸ்பூன் உள்ளிட்டவைகளை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். அது நன்கு வதங்கி எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் நிலையில், வேகவைத்த உருளைக்கிழங்கினை தேங்காய் துருவல் போல் சீவி அதில் சேர்க்கவும். பின்னர் அதில் சிறிது கொத்தமல்லி தழைகளை தூவி ஒருசேர கிண்டி, பச்சை வாடை நீங்கிய பின்னர் அடுப்பை அணைத்து, மசாலாவை நன்கு ஆற விடுங்கள்.
ஓவல் வடிவில் ஸ்டஃப்பிங்க்
நன்கு ஆறிய பின்னர் அந்த மசாலாவை கையில் எடுத்து ஓவல் வடிவத்தில் ஒரு டம்ளருக்குள் வைக்கும் அளவில் உருட்டி உருண்டைகளாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். இப்பொழுது நாம் 10 நிமிடம் ஊற வைத்த ரவை கலவையில் தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு பின்ச் பேக்கிங் சோடா கலந்து எடுத்து கொள்ளுங்கள். பின்னர் டம்ளர்களில் எண்ணெய் தடவி இந்த மாவினை ஒன்றரை கரண்டி ஊற்றி பின்னர் அதில் நாம் உருட்டி வைத்த ஓர் உருண்டையினை வைத்து மேலே மீண்டும் சிறிதளவு மாவினை ஊற்றுங்கள். இவ்வாறு 4-5 டம்ளர்களில் ஊற்றி, இட்லி குக்கரில் ஒரு இட்லி தட்டு மட்டும் வைத்து அதன் மீது இந்த டம்ளர்களை வைத்து 15 நிமிடங்கள் நன்கு வேகவிடவும்.
கூடுதல் சுவை சேர்க்க இதனையும் செய்யுங்கள்
அதன் பிறகு நன்கு உப்பி வெந்து வந்த நிலையில், அந்த டம்ளர்களை சிறிதுநேரம் சூடு தணியவிட்டு, பின் கத்தியினை பயன்படுத்தி டம்ளர்களில் ஓரங்களில் எடுத்துவிட்டு, ஒரு தட்டு தட்டவும். தொடர்ந்து இதனை மேலும் சுவையூட்ட, அடுப்பில் ஒரு பேன் வைத்து அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் 1/4 டீஸ்பூன் மிளகாய்பொடி, சிறிதளவு மஞ்சள் தூள், கொத்தமல்லி தழை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும். அதில் நாம் வேகவைத்து எடுத்துவைத்துள்ள உணவினை போட்டு நன்கு மசாலா வெளிப்புறம் முழுவதும் பரவும் வகையில் உருட்டி எடுங்கள். அதனையடுத்து டம்ளர் வடிவிலிருக்கும் காலை உணவினை கத்தி கொண்டு வட்ட வட்டமாக வெட்டிக்கொள்ளுங்கள். அவ்வளவு தான், சுவையான புதுவித காலை உணவு ரெடி. வாங்க சாப்பிடலாம்...!