இந்தியாவின் சிறந்த தெருக்கடை உணவுகளை பற்றி, நகரம் வாரியாக ஒரு பயணம்
இந்தியாவின் உணவு வகைகள், அதன் கலாச்சாரத்தை போன்றே பன்முகம் கொண்டது. இந்தியாவிலிருக்கும் ஒவ்வொரு மாநிலமும், அதன் உணவுகளுக்கும் பிரசித்திபெற்றது. அப்படி நகரந்தோறும் இருக்கும் பிரபலமான உணவு வகைகளும், அவை எங்கே கிடைக்கும் என்பதையும் பற்றி ஒரு சிறு கண்ணோட்டம் இதோ: சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையின் பிரபலமான கடற்கரைகளில் கிடைக்கும் பீச் சுண்டல் மற்றும் மிளகாய் பஜ்ஜியை ருசிக்க தவறாதீர்கள். சௌகார்பேட்டையில் கிடைக்கும் முறுக்கு சாண்ட்விச், லஸ்ஸி, மைலாப்பூரில் கிடைக்கும் சூடான வடை, கொழுக்கட்டை மற்றும் காளத்தி ஸ்டோர் ரோஸ்மில்க், நுங்கம்பாக்கம் ஏரியாவில் உள்ள பானி பூரி போன்றவற்றை மிஸ் செய்யக்கூடாது. மதுரை: மதுரையில் புகழ்பெற்ற ஜிகர்தண்டாவை குடிக்க தவறாதீர்கள். அதேபோல சூடான பருத்திப்பாலும் அங்கே பிரபலம்.
தில்லி
புது தில்லி முகலாய காலத்திலிருந்தே கலாச்சாரங்களின் கலவையாகவும், உணவுப் பிரியர்களின் கனவாகவும் இருந்து வருகிறது. ஜமா மஸ்ஜித் மற்றும் சாந்தினி சௌக்கிற்கு அருகாமையில் மன்னர்கள் காலத்தில் இருந்து இயங்கி வரும் முகலாய் உணவகங்களை பயணிகள் பார்வையிடலாம் . சாட்கள் , மோமோஸ், ஹனி சில்லி பொட்டேட்டோ (இனிப்பும் காரமும் கலந்த உருளை வறுவல்), சோலே பட்டுரா, மட்டர் குல்ச்சா ஆகியவை கட்டாயம் முயற்சிக்க வேண்டிய சில உணவுகளில் அடங்கும் . இதுமட்டுமின்றி, இங்கே கிடைக்கும் குல்ஃபிக்களும், பராத்தாக்களும் அவசியம் உண்ணவேண்டியவை.
லக்னோ
முகலாய உணவுகளை விரும்புபவர்களுக்கு லக்னோ சரியான இடமாகும். இங்கே தெருக்கடைகளில் விற்கப்படும், வாயில் எச்சில் ஊற வைக்கும் சுவையான உணவு வகைகளை சுவைக்காமல், இந்த நகரத்திற்கான பயணம் முழுமையடையாது. ருசியான மற்றும் சுவையான சிற்றுண்டியைத் தேடுகிறீர்களானால், டோக்ரி சாட்டிற்கு செல்லுங்கள். புகழ்பெற்ற மலாய் மக்கானை முயற்சிக்கவும். ஆவாத் நவாப்புக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட வாயில் உருகும் உணவான மலாய் பான் உடன் உங்கள் பயணத்தை முடிக்கவும்.
பெங்களூரு
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மையமும், வாயில் எச்சிலை வரவைக்கும் சுவையான உணவுகளின் கலவையான நகரமாகும். பெங்களூருவில் இருக்கும்போது , மங்களூர் பன்-ஐ சுவைக்க தவறாதீர்கள். அதேபோல ஒப்புட்டு என அழைக்கப்படும் போளிகளையும் உண்ணலாம். பலவித போளிகள் இங்கே கிடைத்தாலும், குறிப்பாக, கடலை பருப்பு, வெல்லம், ஏலக்காய் தூள், மைதா மற்றும் ரவா ஆகியவற்றால் செய்யப்பட்ட பருப்பு ஒப்புட்டு என்பது மைசூர் ஸ்பெஷலாகும். இது பெங்களூருவில் பிரபலமான தெரு உணவாகும்.
மும்பை மற்றும் கொல்கத்தா
மும்பை: மும்பையில் இருக்கும்போது நீங்கள் பல சுவையான உணவுகளை முயற்சி செய்யலாம். சாட் உணவுகளில் பலவகை இங்கே பிரபலம். குறிப்பாக, பாவ் பாஜி , வாடா பாவ் மற்றும் பேல்பூரி போன்ற உணவுகளின் பிறப்பிடமாகும். அதேபோல, தபேலி , மிசல் பாவ் மற்றும் போஹா போன்ற உணவுகளையும் ருசிக்க மறக்காதீர்கள். கொல்கத்தா: கொல்கத்தா உணவுப் பிரியர்களின் சொர்க்கமாக அறியப்படுகிறது. இங்கே கட்டாயம் முயற்சி செய்ய வேண்டிய சில மாலை நேர சிற்றுண்டிகள் - ஆலு சாப் , பேகுனி மற்றும் பென்யாஜி - இவை அனைத்தும் டெலிபாஜா என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் காரமான மற்றும் கசப்பான உணவுகளை விரும்பினால், ஒரு டஜன் ஃபுச்காக்களை ருசித்துப் பாருங்கள். கொஞ்சம் ஜால் முரியை கூட ருசிக்கலாம்.