வயதானவர்களுக்கு கோடைகால பயணத்தைத் எளிமையாக்க சில உதவிக்குறிப்புகள்!
புதிய கலாச்சாரங்களை ஆராய, மறக்க முடியாத நினைவுகளை உருவாக்க, வயதானவர்களுக்கு கோடைக்காலப் பயணம் ஒரு அருமையான வாய்ப்பாகும். இருப்பினும், வயதானவர்களுக்கு பயணங்களை திட்டமிடுவதில் சில இன்னல்கள் ஏற்படலாம். குறிப்பாக உடல்நலக் கவலைகள் உள்ள வயதானவர்கள், பயணங்கள் செய்ய யோசிப்பார்கள். அவர்களுக்கு இடையூறு இல்லாத மற்றும் மகிழ்ச்சியான கோடைப் பயணங்களைத் திட்டமிட சில குறிப்புகளை காணலாம். முதலில் க்யூரேட்டட் ட்ரிப்ஸ், அதாவது ட்ராவல் ஏஜென்சிகள் மூலம் புக் செய்து பயணிக்கலாம். வயதானவர்கள், மற்ற பயணிகளுடன் கூட்டமாக சேர்ந்து, புதிய இடங்களுக்கு செல்லலாம். வசதியான தங்குமிடத்தை எந்த வித சிரமும் இன்றி பெற்றுக்கொள்ளலாம். ஒரு சுமுகமான பயணத்தை உறுதி செய்ய, முன்கூட்டியே திட்டமிடல் முக்கியமானது. நல்ல போக்குவரத்து வசதிகள் கொண்ட இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.
வயதானவர்களுக்கு கோடைகாலத்தில் பயணம் செய்ய டிப்ஸ்
எடுத்துக்காட்டாக, நீங்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டுமெனில், கடற்கரையில் சக்கர நாற்காலிகளை வாடகைக்கு வழங்கும் இடங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதிக வெப்பம் அல்லது குளிர் வயதானவர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் என்பதால், நீங்கள் செல்லும் இடத்தின் தட்ப வெப்பநிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். பயணக் காப்பீடு செய்ய வேண்டும். இது குறிப்பாக, வயதானவர்களுக்கு இன்றியமையாத தேவையாகும். உதாரணமாக, நீரிழிவு நோய் இருந்தால், நீரிழிவு தொடர்பான மருத்துவச் செலவுகளை உள்ளடக்கும் பாலிசியைத் தேர்ந்தெடுக்கவும். மேலும், கோடை காலங்களில், நீரேற்றமாக இருப்பது மிகவும் முக்கியமானது. தண்ணீர் பாட்டிலை எப்போதுமே எடுத்துச் சென்று, அடிக்கடி நிரப்பிக் கொள்ளுங்கள். பயணத்தின் போது, வீட்டில் உள்ள உங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். அவசரகாலத்தில், அவர்கள் உங்களை எவ்வாறு அணுகலாம் என்பதையும் அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.