LOADING...
கர்ப்ப காலத்தில் கல்லீரல் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க 5 முக்கிய வழிகள்!
கர்ப்ப காலத்தில் கல்லீரல் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும் வழிகள்.

கர்ப்ப காலத்தில் கல்லீரல் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க 5 முக்கிய வழிகள்!

எழுதியவர் Vasuki
May 16, 2026
01:21 pm

செய்தி முன்னோட்டம்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம். அதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று கல்லீரல் ஆரோக்கியம் (Liver Health). கர்ப்ப காலத்தில் ஏற்படும் கல்லீரல் நோய்கள் தாய் மற்றும் பிறக்கப்போகும் குழந்தை ஆகிய இருவருக்குமே சில சமயங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே, கர்ப்பிணிப் பெண்கள் தங்களின் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 5 சுலபமான மற்றும் முக்கியமான வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

#1

உணவுப் பழக்கவழக்கங்களில் மிகுந்த கவனம் செலுத்துங்கள்

கர்ப்பிணிப் பெண்கள் தங்களுடைய உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிகளவில் பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்ள வேண்டும். சத்தான உணவுகளைத் தேர்ந்தெடுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வெளி உணவுகளையும், எண்ணெய் பலகாரங்களையும் தவிர்ப்பது அல்லது குறைத்துக்கொள்வது நல்லது. இதுமட்டுமல்லாமல், உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை (Dehydration) ஏற்படாமல் இருக்கவும், நச்சுப் பொருட்கள் வெளியேறவும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். கூடவே, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கவும், கல்லீரலின் மேல் அதிக அழுத்தம் வராமல் இருக்கவும் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

#2

தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்

கர்ப்ப காலத்தில், மருத்துவரிடம் அடிக்கடி சென்று உரியப் பரிசோதனைகளைச் செய்துகொள்வது மிகவும் அவசியமாகும். இதன் மூலம், ஏதேனும் உடல்நலப் பாதிப்புகள் இருந்தால் மருத்துவர்கள் அதனைச் சரியான நேரத்தில் கண்டறிந்து, தகுந்த சிகிச்சைகளை வழங்க முடியும். குறிப்பாக, கல்லீரல் தொடர்பான பாதிப்புகளை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிவதன் மூலம், பெண்களுக்கு ஏற்படக்கூடிய பெரிய அளவிலான சிக்கல்களைத் தடுக்க இயலும். இத்தகைய பரிசோதனைகளின் போது, கல்லீரலின் செயல்பாட்டு நிலைமையைச் துல்லியமாகத் தெரிந்துகொள்ள, மருத்துவர்கள் இரத்தப் பரிசோதனை (Blood Test), அல்ட்ராசவுண்ட் (Ultrasound) மற்றும் பிற தேவையான சோதனைகளை மேற்கொள்வார்கள்.

Advertisement

#3

போதைப்பழக்கங்களைத் தவிர்த்திடுங்கள்

மது அருந்துதல், புகைபிடித்தல் ஆகிய இரண்டுமே கர்ப்பிணிப் பெண்களுக்குப் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மிக ஆபத்தான பழக்கங்களாகும். இதனால், அந்தப் பெண்ணின் உடல்நலம் மட்டுமல்லாமல், வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திலும் மிகக் கடுமையான எதிர்மறைத் தாக்கங்கள் ஏற்படும். எனவே, கர்ப்ப காலத்தில் இந்த விபரீதமான பழக்கங்களை முழுமையாகக் கைவிடுவது மிக மிக முக்கியமாகும். ஒரு பெண்ணுக்கு இப்பழக்கங்கள் இருந்தால், அவர் உடனடியாக அதிலிருந்து விடுபட முயற்சி செய்ய வேண்டும். இதற்காகத் தயங்காமல் மருத்துவர்களிடம் உரிய ஆலோசனைகளையும், மருத்துவ உதவிகளையும் பெறலாம். மனதளவில் உறுதியோடும் முறையான வழிகாட்டுதலோடும் இருந்தால் மட்டுமே இப்பழக்கங்களிலிருந்து முழுமையாக வெளிவர முடியும்.

Advertisement

#4

மாத்திரைகளை சரியாகப் பயன்படுத்துங்கள்

நிறையப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறாமலேயே தாங்களாகவே மாத்திரைகளை உட்கொள்கிறார்கள், இது மிகவும் தவறான செயலாகும். எந்தவொரு மாத்திரையை எடுத்துக்கொள்வதற்கு முன்பும் தகுதியான மருத்துவரிடம் கேட்க வேண்டும்; அப்பொழுதுதான் அது கல்லீரலின் மீது எந்தவொரு பக்கவிளைவையோ அல்லது பாதிப்பையோ ஏற்படுத்தாது. இதுமட்டுமல்லாமல், வீட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றும் போது கூட மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். புதிதாக எந்தவொரு பாரம்பரிய அல்லது வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்வதற்கு முன்பும் மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெற வேண்டும்; அப்பொழுதுதான் தேவையற்ற உடல்நலச் சிக்கல்கள் எதுவும் வராமல் பாதுகாப்பாக இருக்க முடியும்.

#5

மன அழுத்தத்தைத் தவிர்த்து, நன்றாக ஓய்வு எடுங்கள்

கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் (Stress) ஏற்படுவது இயல்புதான் என்றாலும், அது கல்லீரலின் ஆரோக்கியத்தின் மீது எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, முடிந்தவரை தேவையற்ற பதற்றமும் மன அழுத்தமும் இல்லாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும். தியானம் (Meditation), யோகா அல்லது எளிய உடற்பயிற்சிகள் போன்றவற்றை மேற்கொண்டு மனதை எப்போதும் அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள். இதுமட்டுமல்லாமல், உடல் இழந்த ஆற்றலை மீண்டும் பெறவும், புத்துணர்ச்சியோடு ஆரோக்கியமாக இருக்கவும் போதிய அளவு ஓய்வு எடுப்பது மிகவும் அவசியமாகும். இந்த எளிய மற்றும் ஆரோக்கியமான வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், கர்ப்பிணிப் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள் மற்றும் பிற உடல்நலச் சிக்கல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

Advertisement