LOADING...
'இலவச பள்ளிக்கு கூட லஞ்சம் கேட்டாங்க... ஆனா இப்போ": தவெக அரசுக்கு 'Zoho' ஸ்ரீதர் வேம்பு புகழாரம்
தவெக அரசுக்கு Zoho-வின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு புகழாரம்

'இலவச பள்ளிக்கு கூட லஞ்சம் கேட்டாங்க... ஆனா இப்போ": தவெக அரசுக்கு 'Zoho' ஸ்ரீதர் வேம்பு புகழாரம்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 24, 2026
01:46 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல சர்வதேச மென்பொருள் நிறுவனமான சோஹோ(Zoho)-வின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, எவ்வித லஞ்சமும் இன்றி தனது பள்ளிக்கு மிக விரைவாக அனுமதி கிடைத்துள்ளதாக தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் பாராட்டியுள்ளார். கிராமப்புற குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் பள்ளிக்குக்கூட முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் லஞ்சம் கேட்கப்பட்டதாக அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்சம்

"இலவச பள்ளிக்குக்கூட லஞ்சம் கேட்டார்கள்": ஸ்ரீதர் வேம்பு

ஸ்ரீதர் வேம்பு தென்காசி மாவட்டம் கோவிந்தபேரி கிராமத்தில் தங்கி, அங்கிருந்தபடியே பணியாற்றி வருவதுடன், அப்பகுதி கிராமப்புற ஏழைக் குழந்தைகளுக்காக 'கலைவாணி கல்வி மையம்' என்ற இலவச பள்ளியை நடத்தி வருகிறார். இப்பள்ளிக்கு முந்தைய ஆட்சிக் காலத்தில் அனுமதி பெறுவதில் திட்டமிட்டு தாமதம் ஏற்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஏழைக் குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசமாக இயங்கும் பள்ளி என்று தெரிந்தும், அதிகாரிகள் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாகக் கேட்டதாகவும், பணம் கொடுப்பது மட்டுமே அனுமதி பெற ஒரே வழி என்று தன்னிடம் கூறப்பட்டதாகவும் ஸ்ரீதர் வேம்பு வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தற்பொழுது தவெக அரசு பொறுப்பேற்றவுடன் எந்தவித லஞ்சமுமின்றி, மிக விரைவாகவும் தானாகவும் அனுமதி கிடைத்துள்ளதாகக் கூறி, முதலமைச்சர் விஜய்க்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

கல்வித்துறையின் மாற்றம்

கல்வித்துறையின் மாற்றம்; அமைச்சர் ராஜ்மோகனின் எச்சரிக்கை

ஸ்ரீதர் வேம்புவின் இந்த பாராட்டுக்கு முக்கிய காரணம், கடந்த வாரம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏ. ராஜ்மோகன் பிறப்பித்த உத்தரவுதான். சென்னையில் நடைபெற்ற தனியார் பள்ளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் 848 பள்ளிகளுக்குப் புதிய அங்கீகார கடிதங்களை வழங்கிய அமைச்சர் ராஜ்மோகன், "இனி தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தல் சான்றிதழ் பெறுவதற்கு அரசியல் செல்வாக்கோ, பணப் பலமோ தேவையில்லை; 'தகுதியே' ஒரே அளவுகோல். இதற்காகப் பள்ளிகள் யாருக்கும் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வழங்க வேண்டியதில்லை. அரசியல் தரகர்களோ அல்லது அதிகாரிகளோ பணம் கேட்டால் உடனே புகார் அளிக்கலாம்." எனத்தெரிவித்தார்.

Advertisement