கின்னஸ் சாதனைக்கு முயற்சி-15 மொழிகளை கற்றுத்தேர்ந்த இளம்பெண் கிருபாஷிணி
பல்வேறு மாநில மொழிகள், அந்நிய நாட்டு மொழிகள் என 15 மொழிகளை எழுதவும், பேசவும் கற்றுக்கொண்டு கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்து வருகிறார் கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த கிருபாஷிணி. பட்டபடிப்பினை முடித்துள்ள கிருபாஷிணி பள்ளி பயிலும் போதிருந்தே படிப்பின் மீது மிகுந்த ஆர்வமுடையவராக இருந்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. தனது சிறு வயதிலேயே இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளை கற்று தேர்ந்துள்ளார். இவருக்கு மொழியின் மீதுள்ள ஆர்வத்தை கண்டறிந்த அவரது பெற்றோர் அவரை மேலும் உற்சாகப்படுத்தி ஊக்குவித்துள்ளார்கள்.
30 வயதிற்குள் 20 மொழிகளை கற்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற முயற்சி
இதனை தொடர்ந்து கிருபாஷிணி படிப்படியாக பல்வேறு மொழிகள் கற்க ஆர்வமுற்று முறைப்படி கற்று தேர்ந்துள்ளார். மொழிகளை கற்றுக்கொள்ள பல மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு சென்று பயிற்சி பெற்று வந்துள்ள இவர், ஒரு மொழியை முழுமையாக கற்றுக்கொள்ள 3 மாத காலமே ஆகும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது 15 மொழிகளை இவர் பேசியும், எழுவதும் மட்டுமின்றி முறையாக உச்சரித்தும் வருகிறார். தொடர்ந்து, தன்னை போல் பல்வேறு மொழிகளை கற்க விரும்பும் குழந்தைகளுக்கு இலவசமாக கற்றுக்கொடுகிறார். தன்னுடைய 30 வயதிற்குள் 20 மொழிகளை கற்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதே இவரது குறிக்கோள் ஆகும். இவருடைய இந்த முயற்சிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.