'உங்களிடம் சரியான காரணம் இல்லை': அமலாக்க இயக்குநரகத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்
ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அமலாக்க இயக்குநரகம் அவருக்கு அனுப்பிய மூன்றாவது சம்மனையும் புறக்கணித்தார். டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கை விசாரித்து வரும் அமலாக்க இயக்குநரகம், விசாரணைக்காக அரவிந்த் கெஜ்ரிவாலை அழைத்திருந்தது. ஆனால், அந்த சம்மனை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று புறக்கணித்துள்ளார். இதுகுறித்து அமலாக்க இயக்குனரகத்திற்கு கடிதம் எழுதியிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், "இந்த சம்மன்களை அனுப்பியதற்கான சரியான காரணமோ, நியாயமோ இல்லை " என்று தெரிவித்துள்ளார். அமலாக்க இயக்குனரகம், "தற்போதைய விஷயத்தில் தேவையற்ற ரகசியத்தை பேணுவதாகவும், பல விஷயங்களை மறைப்பதாகவும், தன்னிச்சையாக செயல்படுவதாகவும்" என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
'சரியான காரணமோ நியாயமோ இல்லை': அரவிந்த் கெஜ்ரிவால்
"எனது முந்தைய கடிதங்களுக்குபதிலளித்து, உங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துங்கள். அப்போது தான் நான் அழைக்கப்பட்ட விசாரணையின் உண்மையான நோக்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடியும்" என்று அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்க இயக்குநகரத்திடம் கூறியுள்ளார். நவம்பர் 2, 2023 மற்றும் டிசம்பர் 20, 2023 ஆகிய தேதிகளில் தான் எழுதிய முந்தைய கடிதங்களுக்கு அமலாக்க இயக்குநரகம் இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். "எனவே, இந்த சம்மன்களை அனுப்புவதற்கு உங்களிடம் சரியான காரணமோ நியாயமோ இல்லை என்று நான் கருதுகிறேன்." என்று அவர் இன்று எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.