அதிமுக ஆட்சிக்கால நீட் தொடர்பான 'ரிட்' மனு வாபஸ் - தமிழக அரசு
செய்தி முன்னோட்டம்
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறவும், நீட் தேர்விற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் அப்போதைய ஆளும் கட்சியான அதிமுக வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கானது நிலுவையில் இருந்துவந்த நிலையில், திமுக ஆட்சி காலத்தில் இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது தமிழக அரசு சார்பில் வாய்தா கேட்டிருந்தது. இதனால் தான் தமிழக மாணவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி ஒரு புறம் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிரான ரிட் மனுவினை உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு இன்று(பிப்.,24) விசாரித்தது.
புதிய மனுதாக்கல்
ரிட் மனுவை திரும்பப்பெற அனுமதி கோரிய தமிழக அரசு
அப்போது நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிரான புதிய மனுவை தாக்கல் செய்துள்ளதால், முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை திரும்பப்பெற அனுமதி கோரி தமிழக அரசு கோரிக்கை வைத்தது.
இதனை தொடர்ந்து, இந்த ரிட் மனுவினை எவ்வாறு தாக்கல் செய்தீர்கள் என்று நீதிபதி கேள்வியெழுப்பினார்.
அதற்கு கடந்த ஆட்சியில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது என்று பதிலளிக்கப்பட்டது.
அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி ரிட் மனுவினை திரும்பப்பெற அனுமதி வழங்கினார்.
நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்டம் கூட்டாட்சி அமைப்புக்கு எதிராக உள்ளதால் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் புது மனுவினை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.