தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம்
தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று(மார்ச்.,20) உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் 9வது ஆண்டாக பசுமை இயக்கம் சார்பில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பொதுமக்களுக்கு இலவசமாக 200 சிட்டுக்குருவி கூடு வழங்கப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு சிட்டு குருவிகளால் மனித இனத்திற்கான நன்மைகள் மற்றும் விழிப்புணர்வு ஆகியன ஏற்படுத்தப்பட்டது. இதனையடுத்து மரங்கள் வளர்ப்பது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் குருவி கூடுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வள்ளியூர் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் யோகேஷ் குமார் தலைமை வகித்து பொதுமக்களுக்கு 200 சிட்டு குருவி கூடுகளை வழங்கியுள்ளார். இதில் பசுமை இயக்கம் சார்பிலான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டது குறிப்பிடவேண்டியவை.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் மண்சட்டியில் சிறுதானிய உணவுகள்
இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நற்பணி இயக்கம் சார்பில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. மேலும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையிலான காவலர்கள் அனைவரும் மண் சட்டிகளில் தண்ணீர் மற்றும் சோளம், கம்பு போன்ற சிறுதானிய உணவு பொருட்களை வைத்து உலக சிட்டுக்குருவிகள் தினத்தினை கடைபிடித்துள்ளனர். அதே போல், கோவில்பட்டி பகுதியிலுள்ள அரசு அலுவலகங்களில் அரசு அலுவலகங்களில் சிட்டுக்குருவிகளுக்கு சிறுதானிய உணவு வைக்கப்போவதாகவும், அவற்றை பாதுகாக்க போவதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.