ஹைதராபாத்தில் உலகிலேயே மிக உயரமான அம்பேதகர் சிலை திறப்பு
இந்திய அரசியல் சாசன சிற்பி என போற்றப்படும் அம்பேத்காருக்கு ஹைதராபாத்தில் பிரம்மாண்ட வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக உயரமான அம்பேத்கர் சிலை இது என கூறப்படும் இதன் உயரம் 125 அடி ஆகும். இந்த சிலையினை அமைக்க ரூ.146.5 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட சிலையினையும் மற்றும் புதிய தலைமை செயலக வளாகத்தையும் தெலுங்கானா அரசு கட்டியுள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேலாக இதன் பணிகள் நடந்து வந்த நிலையில், தற்போது அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராகவுள்ளது. இதனை தொடர்ந்து அம்பேத்கர் பிறந்தநாள் இன்று என்பதை முன்னிட்டு இந்த பிரம்மாண்ட சிலையினையும், தலைமை செயலக வளாகத்தினையும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார்.
பிரம்மாண்ட அம்பேத்கர் சிலை 114 டன் வெண்கலத்தில் செய்யப்பட்டுள்ளது
இந்த பிரம்மாண்ட சிலை திறப்பின் பொழுது ஹெலிகாப்டர் மூலம் சிலை மீது மலர்கள் தூவப்பட்டது. அம்பேத்கர் சிலை திறப்பு விழாவினையொட்டி ஹைதராபாத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த பிரம்மாண்ட அம்பேத்கர் சிலை 114 டன் வெண்கலத்துடன், 360 டன் டன் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இந்த சிலையானது 11.4 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை வைக்கப்பட்டுள்ள பீடம் நாடாளுமன்ற கட்டிடம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் ஹுசைன்சாகர் ஏரிக்கரையோரம் 50 அடி உயர பீடத்தில் 125 அடி உயர அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.