பிச்சை எடுத்த 1 லட்ச ரூபாயை நன்கொடையாக கொடுத்த பாட்டி!
ஒடிசா மாநிலத்தில் தான் பிச்சை எடுத்து சேர்த்த 1 லட்ச ரூபாய் பணத்தை ஒரு மூதாட்டி கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். ஒடிசாவில் உள்ள கந்தமால் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கோவிலின் முன் பிச்சை எடுத்து வாழ்ந்து வருபவர் துலா போரா(70). இவருடைய கணவர் சமீபத்தில் இறந்து போனதால் வேறு ஆதரவு இல்லாத இந்த பெண்மணி பிச்சை எடுத்து பிழைத்து வருகிறார். அப்படி இருந்தாலும், இவருக்கு தினமும் யாசகமாக கிடைக்கும் பணத்தை வங்கியில் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்திருக்கிறார்.
1 லட்சம் ரூபாய் நன்கொடை!
சிறிது நாட்களுக்கு முன், வங்கியில் 1 லட்சம் ரூபாய் சேர்ந்திருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதை அறிந்த அவர், தான் சேர்த்து வைத்திருக்கும் மொத்த பணத்தையும் புல்பான் ஜெகன்நாதர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்க ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், அந்த மூதாட்டி சிரமப்பட்டு சேர்த்த மொத்த பணத்தையும் வாங்குவதற்கு முதலில் கோவில் நிர்வாகம் மறுத்திருக்கிறது. அதற்கு அந்த மூதாட்டி, தான் ஜெகன்நாதரின் பெரிய பக்தை என்றும் அவர் கோவில் முன் யாசகம் செய்த பணம் அவர் கோவிலுக்கே போகட்டும் என்றும் கூறி இருக்கிறார். இதைக் கேட்ட கோவில் நிர்வாகம் அவரின் பக்தியை நிராகரிக்க முடியாமல் அந்த பணத்தை வாங்கி இருக்கிறது. யாசகம் செய்யும் ஒரு பாட்டியின் இந்த செயல் பலர் கவனத்தை ஈர்த்திருக்கிறது.