கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? - சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
தமிழகத்தில் உள்ள கும்பகோணம் மாவட்டம் 1000ஆண்டுகளுக்கு மேல் பழமையான சோழ மன்னர்களின் தலைநகராக இருந்துள்ளது என்று கூறப்படுகிறது. அதன்பின்னர் 1789ம்ஆண்டு வரை ஆங்கிலேயர் ஆட்சி காலம் முடியும் வரை தலைநகரமாக இருந்துள்ளது. மேலும் கும்பகோணத்தில் கடந்த 1806ம்ஆண்டு வரை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றமும், தற்போது தஞ்சாவூர் மாவட்ட தலைமை நீதிமன்றம், சிவில் நீதிமன்றங்கள், சிலைத்திருட்டு தடுப்பு நீதிமன்றம் என ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு வெற்றிலை, ஐம்பொன்சிலைகள், பித்தளை குத்து விளக்குகள், பிரபலமான நகைக்கடைகள் என தினந்தோறும் லட்சக்கணக்கில் வருமானமும், ஏற்றுமதியும் செய்யப்படுவதால் கும்பகோணம் வர்த்தக கேந்திரமாக திகழ்கிறது. இதுபோல் பல சிறப்புகள் கொண்ட கும்பகோணத்தை கடந்த 25 ஆண்டுகளாக தனிமாவட்டமாக அறிவிக்க அனைத்து கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
தேர்தல் வாக்குறுதி அளித்த தமிழக முதல்வர்
இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருக்கடையூரிலும், ஒரத்தநாட்டிலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். இதனால் தற்போது இதுகுறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் பலமுறை இதுகுறித்து நேரடியாக சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார். மேலும் முதல்வருக்கு நினைவூட்டும் வகையில் பல அமைதி வழி போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. எனவே சட்டப்பேரவையில் வரும் 10ம் தேதி நடக்கவுள்ள வருவாய் மானியக்கோரிக்கையின் போது கும்பகோணத்தை தனி வருவாய் மாவட்டமாக அறிவிப்பார் என கும்பகோணம் பகுதியில் உள்ள பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.