இந்தி திவாஸ் ஏன் கொண்டாடப்படுகிறது? இந்தியாவில் பேசப்படும் மொழிகள் என்ன?
ஆண்டுதோறும் செப்டம்பர்-14 அன்று இந்தியர்கள், தேசிய 'இந்தி திவாஸ்' கொண்டாடுகிறார்கள். 1949 ஆம் ஆண்டு இதே நாளில், இந்திய குடியரசின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக இந்தி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. தேவநாகரி எழுத்துக்களில் எழுதப்பட்ட, இந்திய அரசியலமைப்பு, 1949 செப்டம்பர் 14 அன்று, இந்தி மொழியை இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக்கொண்டது. மேலும், 14 செப்டம்பர் 1953 அன்று, இந்தியா, முதல் இந்தி தினத்தை (இந்தி திவாஸ்) கொண்டாடியது. இன்று நடைபெற்ற 'இந்தி திவாஸ்' விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "சுதந்திரப் போராட்டத்தில் இருந்து இன்று வரை நாட்டை ஒருங்கிணைத்ததில் இந்தி முக்கியப் பங்காற்றுகிறது" என பேசியது விவாத பொருளாக மாறும் முன்னர், நாட்டில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மற்ற மொழிகளை பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்தி இந்தியாவின் பிரபலமான மொழியா?
தற்போது இந்தியாவில் சுமார் 425 மில்லியன் மக்கள் ஹிந்தியை முதல் மொழியாகவும், சுமார் 120 மில்லியன் மக்கள் ஹிந்தியை இரண்டாம் மொழியாகவும் பேசுகின்றனர். உத்தரப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இந்தி மொழி அதிகம் பேசப்படுகிறது. உலக நாடுகளைப் பொறுத்தவரை, மொரிஷியஸ், நேபாளம், புஜி, சுரினாம், கயானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளிலும் இந்தி பேசப்படுகிறது.
இந்தி திவாஸ் ஏன் கொண்டாடப்படுகிறது
சுதந்திர இந்திய நாட்டில் ஆங்கில மொழியின் அதிகரித்து வரும் போக்கைக் குறைக்கவே, இந்தி திவாஸ் கொண்டாட முக்கிய காரணம். இந்தியை ஆட்சி மொழிகளில் ஒன்றாக மாற்ற அயராது உழைத்த இந்திய எழுத்தாளர் சிம்ஹாவின் பிறந்தநாளையும் இந்த நாள் குறிக்கிறது. இந்தி திவாஸ் தினத்தையொட்டி இந்தியா முழுவதும் பல இலக்கிய மற்றும் கலாச்சார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் உள்ள பிற மொழிகள்
இந்திய அரசியலமைப்பின் "8 வது அட்டவணை" படி, இந்தியாவில் வழக்கத்தில் இருந்த, இருக்கும் 22 முக்கிய மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ், தெலுங்கு, சந்தாலி, சிந்தி, சமஸ்கிருதம், அசாமிஸ், பங்களா, போடோ, டோக்ரி, குஜராத்தி, இந்தி, காஷ்மீரி, கன்னடம், கொங்கனி, மைதிலி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, மற்றும் உருது ஆகியவை அடங்கும். அரசியல் சாசனம் எழுதப்பட்ட தொடக்கத்தில், 14 மொழிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டன. அதன் பின்னரே, போடோ, டோக்ரி, கொங்கனி, மைதிலி, மணிப்பூரி, நேபாளி, சந்தாலி மற்றும் சிந்தி ஆகியவை அங்கீகரிக்கப்பட்டன.
இந்தி தேசிய மொழியா?
அரசியில் அமைப்பின் படி, நாட்டின் எந்த ஒரு மொழியும் தேசிய மொழி என அறிவிக்கப்படவில்லை. மாறாக இந்திய அரசின் அதிகாரப்பூர்வ மொழியாகவே இந்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளும் அதிகாரபூர்வ மொழிகளே. தற்போது அந்தந்த மாநிலங்களுக்கு என தனியாக மாநில மொழியும் உள்ளதால், ஒரு சில மாநிலங்கள், அவற்றின் மாநில மொழிகளை கட்டாயமாகியுள்ளது, மொழிகள் வழக்கொழியாமல் பாதுகாக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.