TVK மாநாட்டில் மேடை மீது விஜய் குறிப்பிட்டு பேசிய வீரமங்கை அஞ்சலையம்மாள் யார்?
தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுத் திடலில் விஜய் கட் அவுட்டுக்கு வலது பக்கத்தில் வீரமங்கை வேலு நாச்சியார், பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார் ஆகியோரின் கட் அவுட்கள் இருக்க, இடது பக்கத்தில் சட்ட மேதை அம்பேத்கர் அருகில் இடம்பெற்றுக்கும் விடுதலைப் போராட்ட வீராங்கனையும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஞ்சலையம்மாள் கட்-அவுட் வைக்கப்பட்டிருந்தது. அதோடு மேடை மீது வீர முழக்கமிட்டு, கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை விஜய் விவரித்த போதும், பகுத்தறிவு பகலவன் பெரியார், படிக்காத மேதை காமராஜருக்கு அடுத்து வீரமங்கை, தென்னிந்தியாவின் ஜான்சி ராணி என அழைக்கப்படும் அஞ்சலையம்மாள் பெயரையும் கூறியிருந்தார். அவர் யார்? அவருடைய வீரம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை இதோ:
ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற முதல் தென்னிந்தியப் பெண்மணி
1890ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி கடலூரில் பிறந்த அஞ்சலையம்மாள், ஆங்கிலேயர் அடக்குமுறைக்கு எதிராக போராடும் வீரம் கொண்டவர். ஐந்தாம் வகுப்பு வரை தான் கல்வி பெற்ற இவர், 1908-ல் முருகப்பாவை திருமணம் செய்து கொண்டார். சென்னைக்கு இடம்பெயர்ந்த பின்பு, தனது கணவருடன் பல சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொண்டார். அஞ்சலையம்மாள் 1921-இல் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற முதல் பெண்மணியாகியுள்ளார். இவர், போராட்டங்களில் தனது சொத்துக்களை முழுமையாக செலவழித்தார். 1927-இல் சிப்பாய் கலகத்தின்போது பலரின் படுகொலைகளுக்குக் காரணமாக இருந்த ஜேம்ஸ் நீலின் சிலையை உடைக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு, ஆங்கிலேயர்களால் சிறைத்தண்டனை பெற்றார்.
மகாத்மா காந்தியால் தத்தெடுக்கப்பட்ட அஞ்சலையம்மாள் மகள்
பின்னர் அதே ஆண்டு டிசம்பரில் தமிழ்நாட்டுக்கு வந்த மகாத்மா காந்தி, அஞ்சலையம்மாளின் மகள், அம்மாக்கண்ணுவை, லீலாவதி என்று பெயர் மாற்றி தன்னுடன் குஜராத்துக்கு அழைத்துச் சென்றார். காந்திய கொள்கையால் ஈர்க்கப்பட்ட அஞ்சலையம்மாள், 1931-இல் கடலூரில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றதற்காக ஆங்கிலேயரால் ஆறு மாதம் சிறைத்தண்டனை பெற்றார். அப்போது, கர்ப்பிணியாக இருந்த அஞ்சலையம்மாள் பிரசவத்திற்காக ஒரு மாதம் விடுப்பு கேட்டு வெளியே வந்து ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த பின்னர் மீண்டும் கைக்குழந்தையுடன் சிறைக்குள் சென்றார். தண்டனைகாலம் நிறைவுற்றதும், நடைபெற்ற அனைத்திந்திய மகளிர் காங்கிரஸ் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். பின்னர் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் மீண்டும் ஒன்பது மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.
தென்னிந்திய ஜான்சி ராணி!
இவ்வாறு வெள்ளையருக்கு எதிராக அவர் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருந்த போது, 1934-ல் ஒருமுறை மகாத்மா காந்தி தமிழ்நாட்டுக்கு வந்தபோது அவரைச் சந்திக்க விரும்பினார். ஆனால், ஆங்கிலேயர் விதித்த தடையால் அவரால் நேரடியாக மகாத்மாவை சந்திக்க முடியாத சூழல் ஏற்படவே, அஞ்சலையம்மாள் பர்தா அணிந்துகொண்டு வந்து காந்தியைச் சந்தித்தார். அஞ்சலையம்மாளின் இந்தத் துணிச்சலைக் கண்டு வியந்த காந்தி, அவரை `தென்னாட்டு ஜான்சி ராணி' என்று அழைத்தார். அதன்பின்னரும் தொடர்ச்சியாக போராட்டம் மற்றும் சிறைவாசம் என சென்றது அஞ்சலையம்மாள் வாழ்க்கை.
சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற அஞ்சலையம்மாள்
1937 மற்றும் 1946-ல் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும், 1952-ல் மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். அவர் உருவாக்கிய அடிப்படைக் கால்வாய் இன்று "அஞ்சலையம்மாள் கால்வாய்" என்று அழைக்கப்படுகிறது. அஞ்சலையம்மாள் 1961-இல் 71-வது வயதில் உயிர் நீத்தார். இவரின் நினைவாக, கடந்த ஆண்டு இவரது சொந்த ஊரான கடலூரில் இவருக்குத் தமிழக அரசால் நிறுவப்பட்ட சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அஞ்சலையம்மாள், மக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடியவர் என்பதுடன், அவரது குடும்பத்தினரும் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கியமானவராக விளங்குகின்றனர். அஞ்சலையம்மாளின் கொள்ளுப்பேரனான எழிலன் நாகநாதன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., சார்பில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார்.