LOADING...
மேற்கு வங்காளத்தில் தொடரும் வன்முறை: சுவேந்து அதிகாரியின் PA சுட்டுக்கொலை
சுவேந்து அதிகாரியின் PA சுட்டுக்கொலை

மேற்கு வங்காளத்தில் தொடரும் வன்முறை: சுவேந்து அதிகாரியின் PA சுட்டுக்கொலை

எழுதியவர் Venkatalakshmi V
May 07, 2026
07:15 am

செய்தி முன்னோட்டம்

மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிந்தைய வன்முறைகள் வெடித்துள்ளன. இதன் உச்சகட்டமாக, எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியின் நெருங்கிய உதவியாளரான சந்திரநாத் ரத் புதன்கிழமை இரவு சுட்டுக்கொல்லப்பட்டது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியம்கிராம் பகுதியில் உள்ள தோஹாரியா என்ற இடத்தில் சந்திரநாத் ரத் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்துள்ளனர். காரை முந்திச் சென்று நிறுத்திய மர்ம நபர்கள், மிக அருகாமையில் இருந்து சந்திரநாத் ரத் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

படுகொலை

திட்டமிட்ட படுகொலை

மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், சந்திரநாத் ரத்தின் தலை, வயிறு மற்றும் மார்புப் பகுதிகளில் குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட தோட்டாக்களை ஆய்வு செய்ததில், ஆஸ்திரியா நாட்டு தயாரிப்பான 'கிளாக்க்' (Glock) ரகத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகிக்கின்றனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பைக்கில் பதிவெண் இல்லை என்பதும், காரின் நம்பர் பிளேட் மாற்றப்பட்டிருந்ததும் இது ஒரு திட்டமிட்ட 'ஸ்கெட்ச்' என்பதை உறுதிப்படுத்துகின்றன.

அரசியல் மோதல்

அரசியல் மோதல் மற்றும் வன்முறை

சந்திரநாத் ரத்தின் கொலையைத் தொடர்ந்து பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது. இந்தத் திட்டமிட்ட படுகொலைக்கு திரிணாமுல் காங்கிரஸ்தான் காரணம் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ், வன்முறைக்குத் தங்களுக்கு உடன்பாடில்லை என்றும், இது குறித்து உயர் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது. மேற்கு வங்கத்தில் 207 இடங்களை வென்று பாஜக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எச்சரித்துள்ளார். வன்முறையில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைது செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement