மூன்று மத குருமார்கள் முன்னிலையில் மகளுக்கு திருமணம்: வைரலாகும் டிஎஸ்பி வீட்டு திருமண பத்திரிகை!
தமிழக காவல்துறையில் கோவை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார் வெற்றிச்செல்வன். முன்னதாக மதம் சார்ந்த பிரச்சினைகளை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றி வந்தார். இதில் சிறப்பாக செயல்பட்டதற்காக குடியரசுத் தலைவர் விருது மற்றும் அண்ணா விருது பெற்றுள்ளார். இவரது மகள் நிஷாந்தினிக்கும், திருநெல்வேலியை சேர்ந்த சுதர்சன் என்பவருக்கும் திருமணம் முடிவானது. திருமணத்திற்கு மும்மதங்களை சேர்ந்த மதகுருமார்கள் முன்னிலையில் நடத்த முடிவு செய்தார். ஆதினம் சாந்தலிங்க அடிகளார், ராமானந்த குமரகுருபரசுவாமிகள், ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ், மஜ்ஜிதே இப்ராஹிம் சுன்னத் ஜமாஅத் இமாம் அப்துல் ரஹீம் இம்தாதிபாகவி ஆகியோர் பெயர்களை திருமண அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ளார்.
வைரலாகும் டிஎஸ்பி வீட்டு திருமண பத்திரிகை
மும்மதங்களைச் சேர்ந்த குருமார்களின் பெயர்களும் தனது மகளின் திருமண பத்திரிகையில் அச்சிடப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரி இவ்வாறு மதங்களைக் கடந்து மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என்று முனைப்பு காட்டியிருப்பது பெருமை அளிப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பத்திரிக்கையில், "உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு." என்ற திருக்குறளும் அச்சிடப்பட்டுள்ளது. தற்போது இந்த பத்திரிகை சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இவரின் மத நல்லினக்கத்திற்கு பொதுமக்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சக காவல் அதிகாரிகள் வரவேற்பையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
இந்த காலவரிசையைப் பகிரவும்