கர்நாடக தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டது பாஜக
2023ஆம் ஆண்டு கர்நாடக தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் நிலையில், பாஜக தலைவரும் கர்நாடக முதல்வருமான பசவராஜ் பொம்மை தனது கட்சியின் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். வாக்கு எண்ணிக்கை இன்னும் முடியவில்லை என்றாலும், 130 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக, 66 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சமீபத்திய ECI தரவுகளின்படி, காங்கிரஸ் 42.93 சதவீத வாக்குகளையும், பாஜக 36.17 சதவீத வாக்குகளையும், மதசார்பற்ற ஜனதா தளம் 12.97 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன. இந்நிலையில், இந்த வருட கர்நாடக தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்வதாக பாஜக தலைவரும் கர்நாடக முதல்வருமான பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நன்றி தெரிவித்த காங்கிரஸ்
"பிரதமரும் பாஜகவினரும் எவ்வளவோ முயற்சி செய்தும் எங்களால் முத்திரை பதிக்க முடியவில்லை. முழு முடிவுகள் வந்தவுடன் நாங்கள் விரிவான பகுப்பாய்வு செய்வோம்" என்று பொம்மை செய்தியாளர்களிடம் கூறினார். "ஆனால், நாங்கள் லோக்சபா தேர்தலில் மீண்டு வருவோம்" என்றும் அவர் கூறியுள்ளார். பாஜக கட்சி நிச்சயமாக வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ், அதன் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நம்பிக்கை இல்லாததால் மற்ற கட்சிகளை தொடர்புகொள்ள முயற்சிப்பதாகவும் பொம்மை இதற்கு முன் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.