Page Loader
மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா தாக்கல்; சட்டத்தை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் உள்ளதா?
மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா இன்று தாக்கல்

மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா தாக்கல்; சட்டத்தை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் உள்ளதா?

எழுதியவர் Sekar Chinnappan
Apr 02, 2025
09:23 am

செய்தி முன்னோட்டம்

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா, 2024, மக்களவையில் புதன்கிழமை (ஏப்ரல் 2) விவாதத்திற்கு வர உள்ளது. மக்களவையைப் பொறுத்தவரை ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதை நிறைவேற்றுவதற்கு தேவையான பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் மற்றும் இந்தியா கூட்டணியின் வெளிநடப்பு இருந்தபோதிலும், அரசாங்கம் போதுமான வாக்குகளைப் பெறும் என்று நம்பிக்கை கொண்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 542 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் தற்போது 293 எம்பிக்களைக் கொண்டுள்ளது. இது சட்டத்தை நிறைவேற்ற தேவையான 272 ஐ விட அதிகமாகும் என்பதால், மக்களவையில் புதன்கிழமையே சட்டம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்ப்பு

எதிர்க்கட்சிகள் மசோதாவிற்கு கடுமையாக எதிர்ப்பு

காங்கிரஸ் மற்றும் பிற இந்தியா கூட்டணி கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகின்றன. இது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அவை கூறியுள்ளன. ஆலோசனைக் குழு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதில் அவர்களுடைய எதிர்ப்பு உச்சக்கட்டத்தை அடைந்தது. முன்னதாக, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளே சட்டத்திற்கு ஆதரவு தர தயக்கம் காட்டின. எனினும், அவர்களது கவலைகள் தீர்க்கப்பட்ட பிறகு ஆதரவைக் காட்டியுள்ளதால், மசோதா பெரிய தடைகள் இல்லாமல் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மக்களவையைப் போல், மாநிலங்களவையில் பாஜக அரசுக்கு பெரும்பான்மை பலம் உள்ளதால் அங்கும் எளிதாக நிறைவேற்றப்படும் சூழல் உள்ளது குறிப்பிடத்தக்கது.