விழுப்புரம் கள்ளச்சாராய வழக்கு - 11 பேரை 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் மரணமடைந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த விவகாரம் குறித்து முன்னதாக காவல்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். மேலும் இந்த வழக்கின் விசாரணையினை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த கள்ளச்சாராய வழக்கில் சம்பந்தப்பட்ட 12 பேர் மீது கொலை வழக்கினை பதிவு செய்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நீதிமன்றத்தில் அனுமதி கோரிய சிபிசிஐடி
சிபிசிஐடி போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 12 பேரில் 11 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், மதன் என்னும் நபரை சிபிசிஐடி போலீசார் குழுக்கள் அமைத்து தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்நிலையில் இந்த கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 11 பேரை தங்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் அனுமதி கோரினர். அதனை தொடர்ந்து, குறிப்பிட்ட அந்த 11 பேரினை சிபிசிஐடி காவலில் 3 நாட்களுக்கு எடுத்து விசாரிக்க விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவினை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.