விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கு - ஜாமீன் கோரி 7 நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்
செய்தி முன்னோட்டம்
விழுப்புரம், கெடார் அருகே அன்புஜோதி என்னும் ஆசிரமம் 18ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிவந்துள்ளது.
அங்கு தங்கியிருந்த ஆதரவற்றோர், மனநலம் சரியில்லாதோரை கொடுமை செய்வதாகவும், மர்மமான முறையில் அங்கு தங்கியுள்ளோர் காணாமல் போவதாகவும் புகார்கள் எழுந்தது.
இந்த புகார்களின் அடிப்படையில் ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், மேலாளர் பிஜோமோன் மற்றும் ஆசிரம பணியாளர்கள் என மொத்தம் 9 பேர் 13 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் அங்கிருந்து 140 பேரை மீட்டு வேறு காப்பகங்களிலும், சிகிச்சை தேவைப்பட்டோரை அரசு மருத்துவமனைகளிலும் போலீசார் சேர்த்தனர்.
ஜாமீன் மனு
25 ஆண்டுகளாக நடத்தி வரும் தங்களுக்கு எதிராக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
தமிழ்நாடு முழுவதும் இந்த வழக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கில் ஜாமீன் கோரி 7 நிர்வாகிகள் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ஆசிரம நிர்வாகியான ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உள்ளிட்டோர் ஜாமீன் கோரியுள்ள இந்த 7 பேரில் அடங்குவர்.
அவர்கள் கோரியுள்ள ஜாமீன் மனுவில் அனைத்து உரிமங்களும், சான்றுகளும் பெற்று 25 ஆண்டுகளாக நடத்தி வரும் தங்களுக்கு எதிராக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.