விருதுநகர் மாவட்டம் - நம் முன்னோர்கள் விட்டு சென்ற ஆயிரக்கணக்கான பொக்கிஷங்கள்
விருதுநகர், வெம்பக்கோட்டை அருகே வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் 35ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட மேற்பரப்பு அகழாய்வின்போது இங்கே நுண் கற்காலம் முதல் இடைக்காலம் வரை மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து, வைப்பாற்றின் வடகரையில் அமைந்துள்ள சுமார் 25ஏக்கர் பரப்பளவில் தொல்லியல்துறையினர் கடந்த ஆண்டு மார்ச் 16ம்தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ளத்துவங்கினர். அங்கு 16 குழிகளில் பல்வேறு அரியபொருட்கள் தற்போது கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது. சுடுமண்ணாலான பகடைக்காய், ஆட்டக்காய்கள், சங்கு வளையல்கள், முத்துமணிகள், காளை உருவம், சூடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டு பொருட்கள், பதக்கம், குடுவை, புகைக்கும் குழாய், சுடுமண்ணாலான மனிதனின் தலை உருவம் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதேபோல காதணிகள், தங்க அணிகலன், பழங்கால பாசிமணிகள் உட்பட 3,254 பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
2ம் கட்ட அகழாய்வு பணி இம்மாத இறுதியில் மீண்டும் துவங்கவுள்ளதாக தகவல்
இந்த முதற்கட்ட அகழாய்வு முடிவில் சங்கு வளையல்கள் இங்கு தயாரிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் மற்றும் அதனை கடல்வழியாக வெளிநாடுகளுக்கு வணிகம் செய்ததற்கான ஆதாரங்கள் முதலியன கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த முதற்கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி நிறைவடைந்தது என அறிவிக்கப்பட்டது. மேலும் இங்கு கண்டறியப்பட்ட செப்பு நாணையங்கள் ஆப்கன் நாட்டுடனான வர்த்தக உறவை எடுத்துக்காட்டு விதமாகவும், அதற்கான அடையாளமாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். தொடர்ந்து பல்வேறு முத்திரைகள் இருப்பதால், அங்கு வெவ்வேறு குழுக்கள் வந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த 16 இடங்களில் தீ மூலம் ஏதோ செய்துள்ளதாக சான்றும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியில் 2ம்கட்ட அகழாய்வுப்பணி இம்மாத இறுதியில் மீண்டும் துவங்கவுள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.