எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது
நிறைய மலையேற்ற சாகச வீரர்களின் கனவே எவரெஸ்ட் சிகரத்தைத் தொடுவதுதான். 29,031 அடி உயரம் கொண்ட இந்த சிகரமே உலகின் மிக உயரமான சிகரம் என்று கருதப்படுகிறது. எத்தனையோ பேர் இந்த சிகரத்தின் உச்சியைத் தொட இதுவரை முயன்றுள்ளனர். ஆனால், அதில் வெற்றி பெறுவது என்னவோ சிலர் தான். பனியும் குளிரும் அதிகம் உள்ள இமாலய மலைத் தொடரில் இந்த சிகரம் அமைந்திருப்பதால் இந்த சிகரத்தில் ஏறுவது மிக சிரமம். அந்த சிகரத்தில் ஏற முடியவில்லை என்றாலும் அதை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்று விரும்பிய முதிய தம்பதி ஒன்று 17,000 அடி உயரம் வரை சென்று எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டுவிட்டு வந்திருக்கின்றனர். இந்த 86 வயது தம்பதி மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
எவரெஸ்ட்டை நோக்கிய ஒரு பயணம்!
இவர்களின் லட்சியமே எவரெஸ்ட் சிகரத்தை எப்படியாவது அருகில் இருந்து பார்க்க வேண்டும் என்பதுதான். ஆனால், இளமையானவர்களே ஏற திணறும் மலையில் தள்ளாத வயதில் இவர்களால் எப்படி ஏற முடியும்? இதனால், இந்த தம்பதியர் தங்களை எவரெஸ்ட்டிற்கு கூட்டி செல்வதற்கு பல ஹெலிகாப்டர் சேவை நிறுவனங்களை அணுகி இருக்கின்றனர். கடைசியில், அன்டி தபா என்னும் விமானி இதற்கு ஒப்புக்கொண்டு இவர்களை எவரெஸ்ட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார். அங்கு சென்ற இந்த தம்பதியர் எவரெஸ்ட்டின் அழகை நேரில் கண்டு ரசித்தனர். இதை, ஹெலிகாப்டர் விமானி அன்டி தபா வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். தட்டு தடுமாறும் தன் கணவனை கைத்தாங்கலாக கூட்டி செல்லும் இந்த மனைவியின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.