கர்நாடகாவில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை உடைத்த கிராம மக்கள்
கர்நாடகாவின் சட்டசபை தேர்தல் இன்று(மே.,10) நடைபெற்றது. விஜயபுரா மாவட்டம் மசபினாலா என்னும் கிராமத்தில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் எடுத்து சென்றதை பார்த்த அப்பகுதி மக்கள் வாக்குப்பதிவு நேரம் முடிவடைவதற்குள் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து செல்வதாக நினைத்து கலாட்டாவில் ஈடுபட்டுள்ளார்கள். அதிகாரிகளிடம் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்கி அதனை உடைத்து, தேர்தல் அதிகாரிகளின் வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளார்கள். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவ துவங்கியது. தேர்தல் நேரத்தில் வழக்கமாக தேர்தல் அதிகாரிகள் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை கைவசம் வைத்திருப்பர். வாக்குபதிவின் பொழுது இயந்திரத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் மாற்றாக வேறு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வாக்குப்பதிவானது தொடரும் என்பது குறிப்பிடவேண்டியவை.
கலவரம் குறித்து காவல்துறை விசாரணை
அதன்படி அந்த குறிப்பிட்ட கிராமத்தில் இருந்து வேறு பகுதிக்கு அந்த கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் எடுத்து செல்வதை கண்டு வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் என நினைத்தே இந்த தாக்குதல் நடந்துள்ளது. முன்னதாக இது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேள்விகளை மக்கள் எழுப்பியுள்ளார்கள். ஆனால் அதற்கு அங்கிருந்த அதிகாரிகள் யாரும் முறையாக பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இதனாலேயே மக்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்றும் கூறப்படுகிறது. தேர்தல் அதிகாரிகள் மற்றும் அவர்களது வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் தரப்பில் சரியான விளக்கம் அளிக்கப்படாததால், தேர்தலில் முறைகேடு நடப்பதாக தாங்கள் நினைத்ததாக அக்கிராம மக்கள் குற்றசாட்டுகிறார்கள். தற்போது இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.