மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த்
பிரபல நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு, தனது பொது வாழ்க்கையில் இருந்து சற்று ஒதுங்கி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். இதன்படி மருத்துவர்கள் பரிந்துரைப்படி சிகிச்சைக்காக விஜயகாந்த், அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்று வருகிறார் என்னும் தகவலும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. அதே போல் இவர் சென்னை மணப்பாக்கத்தில் அமைந்துள்ள மியாட் மருத்துவமனையில் தான் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவர் நவம்பர் மாதம் 18ம்.,தேதி சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள மியாட் மருத்துவமனையில், தொடர் இருமல், மார்புசளி, காய்ச்சல், உடல் சோர்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதன் காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார் என தகவல்
அதன் பின்னர் அவருக்கான மூச்சுத்திணறலுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. அதன் பின்னர், அவரது உடல்நிலை சீராகிவிட்டது என்று மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியான நிலையில், டிசம்பர் 11ம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து தனது வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் அவர் மீண்டும் நேற்று(டிச.,26) இரவு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது மக்கள் மத்தியிலும் அவரது தொண்டர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியினையும், பரபரப்பினையும் ஏற்படுத்தியது. இதனால் தேமுதிக சார்பில் இது குறித்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 'தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் 15 நாட்களுக்கு ஒருமுறை என்னும் வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். பூரண உடல்நலத்துடன் இருக்கும் அவர் பரிசோதனைகள் முடிந்த பின்னர் நாளை மறுநாள் வீடு திரும்புவார்' என்று கூறப்பட்டுள்ளது.