LOADING...
50 சீட்டுடன் துணை முதல்வர் பதவி: ஆந்திரா ஃபார்முலாவுடன் விஜயை இணைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி கடைசி கட்ட முயற்சி?
விஜயுடன் என்டிஏ ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்

50 சீட்டுடன் துணை முதல்வர் பதவி: ஆந்திரா ஃபார்முலாவுடன் விஜயை இணைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி கடைசி கட்ட முயற்சி?

எழுதியவர் Sekar Chinnappan
Mar 09, 2026
03:43 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. ஆந்திர மாநிலத் துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், நேரடியாக விஜய் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் ஆந்திராவில் 100% வெற்றி பெற்ற பவன் கல்யாணின் ஆந்திரா ஃபார்முலாவை (கூட்டணி அமைத்துப் போட்டியிடுதல்) விஜய்க்குப் புரிய வைக்க பாஜக அவரைத் தூதுவராகக் களமிறக்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகக் கூறப்படுகிறது.

வியூகம்

பாஜகவின் வியூகம் என்ன?

தமிழகத்தில் திமுகவை வீழ்த்த வேண்டுமென்றால், வாக்குகள் சிதறாமல் இருக்க வேண்டும். அதற்கு அதிமுக, பாஜக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் ஒரே கூட்டணியில் இணைவதே பலம் தரும் என்பது பாஜகவின் கணக்கு எனக் கூறப்படுகிறது. பாஜக நேரடியாக விஜயை அழைத்தால், அது அவரது திராவிட-தமிழ் தேசிய கொள்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், சினிமா பின்னணி கொண்ட பவன் கல்யாண் மூலம் இந்தத் தூது அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வரும் நிலையில், விஜய் இணைந்தால் அது மெகா கூட்டணியாக மாறும் என அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகிறது.

தர்மசங்கடம்

விஜய்க்கு இருக்கும் தர்மசங்கடம்

விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டில் பாஜகவை சித்தாந்த எதிரி என்றும், திமுகவை அரசியல் எதிரி என்றும் அறிவித்திருந்தார். குறிப்பாக, பாஜகவுடன் இணைந்தால் சிறுபான்மையினர் மற்றும் நடுநிலை வாக்குகளை இழக்க நேரிடும் என்ற அச்சம் தவெகவுக்கு உள்ளது. தனித்துப் போட்டியிட்டால் வாக்குகள் பிரிந்து மீண்டும் திமுகவுக்கே சாதகமாக அமையும் என்ற அரசியல் எதார்த்தத்தையும் விஜய் ஆலோசித்து வருவதாக தவெக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Advertisement

நிலைப்பாடு

தவெகவின் நிலைப்பாடு

இருப்பினும், தவெக தரப்பில் இருந்து இந்தக் கூட்டணி செய்திகள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. "எங்கள் இலக்கு 2026 இல் தனித்து ஆட்சி அமைப்பதே" என்று கட்சியின் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஏற்கனவே தெரிவித்திருந்தார். தற்போதுவரை இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கட்சியின் உயர்மட்ட தலைவர்களிடம் இருந்து வரவில்லை. எனினும் அரசியலில் எதுவும் நிரந்தமில்லை என்பதால், விஜய் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்தாலும் ஆச்சரியமில்லை என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Advertisement