திமுக ஆர்ப்பாட்டத்தில் விஜய்- த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க களமிறங்கிய தவெக
செய்தி முன்னோட்டம்
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் விஜய்யை நடிகை த்ரிஷாவுடன் தொடர்புபடுத்தி இரட்டை அர்த்தத்தில் பேசியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டிக்க தவறியதாக கூறி, தவெக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், காவிரியிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வரவில்லை என்றும், முதல்வர் விஜய் திமுக மீது பொய் வழக்கு போடுவதிலேயே கவனமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். அப்போது மேடையிலிருந்த தொண்டர்கள் சிலர் நடிகையின் பெயரைக்கூறி கோஷமிட்ட நிலையில், அதற்கு உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தத்தில் அளித்த விளக்கம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகார்
தேசிய மகளிர் ஆணையத்தில் பாய்ந்த புகார்
உதயநிதியின் இந்த எல்லை மீறியப் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பொதுவெளியில் பெண்களை அவமானப்படுத்தும் வகையிலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்தும் பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் அவசரப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு தவெக பொதுச்செயலாளர் மற்றும் அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த அவதூறு பேச்சை கண்டித்து சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் இன்று தவெக மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
மேலும், அவர் மீது அனைத்து மாவட்ட காவல் நிலையங்களிலும் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.