LOADING...
விதிப்படி முருகன் தரிசனம்.. ஷீரடியில் ஆன்மீகப் பயணம்: தவெக தலைவர் விஜய்யின் தொடர் பயணங்கள் பலித்ததா?
திருச்செந்தூர் முருகனைத் தரிசித்த விஜய்

விதிப்படி முருகன் தரிசனம்.. ஷீரடியில் ஆன்மீகப் பயணம்: தவெக தலைவர் விஜய்யின் தொடர் பயணங்கள் பலித்ததா?

எழுதியவர் Vasuki
Apr 29, 2026
09:23 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆன்மீகப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். விஜய், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தது குறித்து எழுப்பப்பட்ட சர்ச்சைகளுக்குக் கோயில் நிர்வாகம் தற்போது விளக்கமளித்துள்ளது. கிறிஸ்தவரான விஜய் எப்படி ஆகம விதிகளுக்கு உட்பட்ட பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டார் என்ற கேள்விக்கு, அவர் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே தரிசனம் செய்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அவர் தரிசனம் செய்த நிலையில், இன்று அவர் மகாராஷ்டிர மாநிலம் சீரடியில் உள்ள சாய்பாபா கோயிலில் வழிபாடு நடத்தினார்.

சர்ச்சையும் சட்ட விளக்கமும்

பூரண கும்ப மரியாதை

தேர்தல் முடிந்த கையோடு, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சென்ற விஜய், நேற்று அதிகாலை திருச்செந்தூர் முருகனைத் தரிசித்தார். பட்டு வேட்டி அணிந்து பாரம்பரிய முறைப்படி வந்த அவருக்குப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இருப்பினும், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த அவர், கருவறை வரை சென்று தரிசனம் செய்தது ஆகம விதிகளுக்கு எதிரானது என வலதுசாரி அமைப்புகள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பின. 2024-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, இந்து மதத்தைச் சேராதவர்கள் கோயிலுக்குள் தரிசனம் செய்ய வரலாம்; ஆனால் அவர்கள் கோயிலின் வழிபாட்டு முறைகளை ஏற்றுக்கொள்வதாக உறுதிமொழி அளித்துக் கையொப்பமிட வேண்டும்.

பதிவேட்டில் கையெழுத்திட்ட விஜய்

ஷீரடியில் சாய்பாபா தரிசனம்

இந்த விவகாரம் குறித்து திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் ராமு விரிவான விளக்கம் அளித்துள்ளார். விஜய் கோயிலுக்கு வந்தவுடன் நேராக உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று, முக்கியப் பிரமுகர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார். இந்து மதம் அல்லாதவர்கள் 'நான் இந்து மத வழிபாட்டு முறைகளை ஏற்றுக்கொள்கிறேன்' என்ற உறுதிமொழியில் கையெழுத்திட்டால் மட்டுமே கொடி மரத்தைத் தாண்டி அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி, விஜய் தனது முழுச் சம்மதத்துடன் அந்தப் பதிவேட்டில் கையெழுத்திட்ட பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டார். திருச்செந்தூர் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மகாராஷ்டிரா சென்ற விஜய், உலகப் புகழ்பெற்ற சீரடி சாய்பாபா கோயிலுக்குச் சென்றார். அங்குப் பாபாவின் சமாதி முன்பு அமர்ந்து சில நிமிடங்கள் தியானம் செய்த அவர், சிறப்புப் பூஜைகளிலும் கலந்துகொண்டார்.

Advertisement

ஆன்மீகப் பயணங்கள்

அரசியல் கணக்கா? ஆன்மீகத் தேடலா?

கடலில் கால் நனைத்து விட்டு வந்த விஜய், அர்ச்சகர்கள் வழங்கிய 'வேல்' ஏந்தி மூலவர் சந்நிதி முன்பாக அமர்ந்து விஸ்வரூப தரிசனம் செய்தார். சுமார் அரை மணி நேரம் கோயிலில் இருந்த அவர், எவ்வித விதிகளையும் மீறாமல் கோயில் நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படியே செயல்பட்டார் என இணை ஆணையர் தெளிவுபடுத்தியுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், விஜய்யின் இந்தத் தொடர் ஆன்மீகப் பயணங்கள் அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது. இது ஒருபுறம் அமைதிக்கான பயணமாகப் பார்க்கப்பட்டாலும், மறுபுறம் அனைத்து மதத்தினரையும் கவரும் ஒரு அரசியல் வியூகமாகவும் விமர்சகர்களால் கருதப்படுகிறது. இன்று வெளியான கருத்துக்கணிப்பில், TVK கட்சி பாண்டிச்சேரியில் நல்ல வாக்கு சதவிகிதத்தை பெற்றிருந்தாலும், தமிழகத்தில் மாற்று சக்தியாக உருவாகவில்லை.

Advertisement