பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கீழே விழுந்து கிடந்த மூவர்ண கொடி: பிரதமர் மோடியின் நெகிழ வைக்கும் வீடியோ
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் புகைப்பட அமர்வின் போது, பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக் கொடிக்கு மரியாதை செலுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க செயலை செய்தார். பிரிக்ஸ் நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் குழு புகைப்படம் எடுக்க அழைக்கப்பட்டனர். அப்போதுதான் பிரதமர் மோடி தரையில் கிடந்த ஒரு மினி மூவர்ணக் கொடியை கவனித்தார். அந்தந்த நாட்டு தலைவர்கள் நிற்க வேண்டிய இடத்தை குறிப்பிடுவதற்காக ஐந்து நாடுகளின் சிறிய தேசிய கொடிகள் மேடையின் தரையில் வைக்கப்பட்டிருந்தன. இதை உடனடியாகக் கவனித்த பிரதமர் மோடி, அதை மிதிக்காமல் பார்த்துக் கொண்டார்.
தேசிய கொடிக்கு பிரதமர் மோடி செய்த மரியாதை
அதன் பின், அவர் தேசியக் கொடியை எடுத்து தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். இதை கவனித்த தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவும் அதைப் பின்பற்றி, தரையில் வைக்கப்பட்டிருந்த தென்னாப்பிரிக்கக் கொடியை தன் கைகளில் வைத்து கொண்டார். முன்னதாக, பிரதமர் மோடி, அதிபர் சிரில் ரமபோசாவுடன் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், பலதரப்பு பிரச்சினைகள் மற்றும் உலகளாவிய தெற்கின் குரலை வலுப்படுத்தவதற்கான வழிகள் குறித்து கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஆகஸ்ட் 22-24 வரை தென்னாப்பிரிக்கா தலைமையில் நடைபெறும் 15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்காற்றி வருகிறார்.