சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா கவுரி-உச்சநீதிமன்ற உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகம் தேக்கம் அடைந்துள்ள காரணத்தினால் 5 புதிய கூடுதல் நீதிபதிகளை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகளான ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி, அவர்களையடுத்து வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோரும் நீதிபதிகளாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இவர்களுக்கு இன்று(பிப்.,7) சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா விரைவில் பதவி பிராமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்தது. இதனிடையே, மத்திய அரசு வழக்கறிஞராக விக்டோரியா கவுரியை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் சார்பில் குடியரசு தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. அவர்கள் அளித்த புகாரின் பேரில் அவசர வழக்காக இன்று(பிப்.,7) உச்சநீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பதவியேற்புக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்
இந்த விசாரணையில், நீதிபதிகளை நியமிக்கும் பொழுது அந்த நீதிமன்றத்தின் நீதிபதிகளிடம் கொலிஜியம் கருத்து கேட்கும். பல்வேறு விஷயங்களை ஆராய்ந்த பின்னரே கொலிஜியம் பரிந்துரை செய்யும். மனுதாரர் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றங்களுக்கு தெரியாமலா இருக்கும் என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். மேலும் நீதிபதியான சஞ்சீவ் கண்ணா, அவர் மாணவனாக இருந்தபொழுது அரசியல் கட்சியுடன் தொடர்பில் இருந்துள்ளதாக கூறியுள்ளார். இதனையடுத்து விக்டோரியா பதவியேற்புக்கு தடைவிதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து, விக்டோரியா கவுரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக முறையாக பதவியேற்று கொண்டார். முன்னதாக, பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியின் தேசிய பொதுச்செயலாளராக பொறுப்பு வகிக்கும் இவர், அந்த கட்சிக்கும், கொள்கைகளுக்கும் விசுவாசமாக உள்ளார் என்று கூறப்பட்டு வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.