சந்திரயான் திட்டங்களை வழிநடத்திய தமிழர்கள் வரிசையில் இணைந்த வீரமுத்துவேல், யார் இவர்?
இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவின் மிக முக்கியமான திட்டமாகக் கருதப்படும் சந்திரயான் 3 விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த சந்திரயான்-3யை மேம்படுத்தியதில் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துவீரவேல் என்பவரின் பங்கும் உண்டு. வீரமுத்துவேல் தான் சந்திரயான்-3 திட்டத்தின் திட்ட இயக்குநராகவும் செயல்பட்டிருக்கிறார். 1989-ல் இருந்தே இஸ்ரோவில் பணியாற்றி வரும் முத்துவீரவேல், 2016-ல் விண்கலத்தின் மின்னணுத் தொகுப்பில் அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் முறை குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றைச் சமர்ப்பித்திருக்கிறார். நிலவில் லேண்டரை தரையிறக்குவதற்கு மிகவும் இந்தத் தொழில்நுட்பம் உதவியாக இருக்கும் என அப்போது பேசப்பட்ட நிலையில், அதுவே தற்போது வீரமுத்துவேலை சந்திரயான்-3 திட்டத்தின் திட்ட இயக்குநர் பதிவியிலும் அமர்த்தியிருக்கிறது.
தொடர்ந்து முக்கியப் பதவிகளில் கோலோச்சும் தமிழர்கள்:
சந்திரனுக்கு இதுவரை மூன்று விண்கலங்களை அனுப்பியிருக்கிறது இஸ்ரோ. சந்திரயான்-1, சந்திரயான்-2 மற்றும் இறுதியாக நேற்று அனுப்பப்பட்ட சந்திரயான்-3. 2008-ல் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-1வின் திட்ட இயக்குநராக செயல்பட்ட மயில்சாமி அண்ணாதுரை ஒரு தமிழர். அதனைத் தொடர்ந்து, 2019-ல் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2வின் திட்ட இயக்குநராக செயல்பட்ட வனிதாவும் தமிழகத்தைச் சேர்ந்தவரே. மூன்றாவதாக அந்த வரிசையில் இடம்பிடித்து தமிழகத்தைப் பெருமைப்படுத்தியிருக்கிறார் வீரமுத்துவேல். இவர், தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ பட்டமும், அதனைத் தொடர்ந்து தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இயந்திரப் பொறியியல் பட்டமும் பெற்றிருக்கிறார். மெட்ராஸ் ஐஐடியில் Ph.D பட்டம் பெற்றபின் 1989-ல் இஸ்ரோவில் பணியில் இணைந்த இவர், கடந்த 30 ஆண்டுகளாக இஸ்ரோவில் பல்வேறு பதவிகளை வகித்திருக்கிரார் என்பது குறிப்பிடத்தக்கது.