தமிழ்நாட்டில் அமலுக்கு வந்த VB G RAM G 125 நாள் வேலைவாய்ப்பு திட்டம்: முழு விவரம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) இன்று முதல் முறைப்படி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக, மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள 'விக்சித் பாரத் கேரண்டி ஃபார் ரோஜ்கார் அண்ட் ஆஜீவிகா மிஷன் கிராமின்' (VB-G RAM G - விபி ஜிராம் ஜி) என்ற புதிய வேலைவாய்ப்புத் திட்டம் ஜூலை 1ஆம் தேதியான இன்று முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதற்கான விரிவான விதிமுறைகள் அடங்கிய அரசாணையை தமிழக அரசு தனது அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
125 நாட்களாக உயர்த்தப்பட்ட வேலைவாய்ப்பு
புதிய விபி ஜிராம் ஜி திட்டத்தின் கீழ், கிராமப்புறக் குடும்பங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 100 நாட்கள் வேலை உத்தரவாதம், இனி 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் ₹12,642 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதிச் செலவினத்தில் 60 சதவீதத்தை மத்திய அரசும் (₹7,585 கோடி), 40 சதவீதத்தை மாநில அரசும் (₹5,057 கோடி) பகிர்ந்து கொள்கின்றன. வேலை கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்பட வேண்டும்; தவறினால் விதிகளின்படி குறிப்பிட்ட வேலைவாய்ப்பு உதவித்தொகை (Unemployment Allowance) வழங்கப்படும்.
இழப்பீடு
15 நாட்களுக்குள் சம்பளம் மற்றும் தாமத இழப்பீடு
இத்திட்டத்தில் தொழிலாளர்களின் ஊதிய உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வேலை செய்த தொழிலாளர்களுக்கு அதிகபட்சமாக 15 நாட்களுக்குள் அவர்களது வங்கிக் கணக்கில் சம்பளம் நேரடியாக வரவு வைக்கப்பட வேண்டும். சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், 16-வது நாளில் இருந்து நிலுவைத் தொகைக்கு நாளொன்றுக்கு 0.05 சதவீதம் வீதம் இழப்பீடு வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் குடும்பங்களுக்கு 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் புதிய 'கிராமின் ரோஜ்கார் கேரண்டி அட்டை' வழங்கப்படும். மேலும், இதில் பங்கேற்கும் தொழிலாளர்களில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு (33%) பெண்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தடை
உச்சகட்ட விவசாய காலங்களில் 60 நாட்கள் தடை
விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, பயிர் விதைப்பு மற்றும் அறுவடை போன்ற உச்சகட்ட விவசாயக் காலங்களில் ஆண்டுக்கு மொத்தம் 60 நாட்கள் வரை இந்தத் திட்டப் பணிகள் நடைபெறாது. தொழிலாளர்கள் வசிக்கும் கிராமத்தில் இருந்து 5 கி.மீ. சுற்றளவுக்குள் வேலை வழங்கப்படும்; அதற்கு அப்பால் வேலை வழங்கப்பட்டால் கூடுதலாக 10 சதவீத கூலி வழங்கப்படும். மேலும், முறைகேடுகளைத் தடுக்க தொழிலாளர்களின் வருகைப் பதிவு பயோமெட்ரிக் முறையிலும், பணிகள் அனைத்தும் ஜியோ-டேக்கிங் மற்றும் GPS தொழில்நுட்பத்தின் மூலமும், செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடனும் கண்காணிக்கப்படும்.