உத்தரகாண்ட் நீர்மின் நிலைய சுரங்கத்தில் திடீரென பாய்ந்த சகதி நீர்: 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு
செய்தி முன்னோட்டம்
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள மாயாபூர் (பிப்பல்கோட்டி) பகுதியில் கட்டப்பட்டு வரும் 'விஷ்ணுகாட்-பிப்பல்கோட்டி' நீர்மின் நிலைய சுரங்கப் பாதைக்குள் வியாழக்கிழமை இரவு திடீரென அதிக அளவிலான நீர் மற்றும் சகதி பாய்ந்ததில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் (HCC) மேற்கொண்டு வந்த இந்த திட்டத்தில், வியாழக்கிழமை மாலை 6:45 முதல் 7:00 மணி அளவில் பணி இயல்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த போது, பலத்த சத்தத்துடன் திடீரென நீர் மற்றும் நிலச்சரிவு இடிபாடுகள் சுரங்கத்திற்குள் பாய்ந்தன. இதனால் அப்பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 22 தொழிலாளர்கள் உடனடியாக உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
மீட்பு
முப்படை மற்றும் மீட்புக் குழுக்களின் தீவிர நடவடிக்கை
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), இந்திய-திபெத் எல்லைக் காவல் படை (ITBP), ராணுவம் மற்றும் உள்ளூர் போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சுரங்கத்திற்குள் பெருக்கெடுத்து ஓடும் நீரை கடக்க SDRF குழுவினர் சிறப்புப் படகுகளைப் பயன்படுத்தி மீட்டெடுத்தனர்.
மீட்கப்பட்ட 14 காயமடைந்த தொழிலாளர்கள் உடனடியாக அருகில் உள்ள கோபேஷ்வர் மற்றும் பிப்பல்கோட்டி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டுத் தீவிரப்படுத்தி வருகிறார். மேலும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், அம்மைய மாநில முதல்வர்களுடன் தொலைபேசியில் பேசி நிலைமைகளை விளக்கியுள்ளார்.