'விமானத்தின் அருகே கூட விடுவதில்லை!' F-35 விற்பனை குறித்து அமெரிக்காவிடம் எந்த சலுகையும் இல்லை; IAF தளபதி பரபரப்பு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் அதிநவீன ஐந்தாம் தலைமுறை F-35 போர் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ முன்மொழிவும் வரவில்லை என்று இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோக்பூரில் நடைபெற்ற பன்னாட்டு வான்பயிற்சி தரங் சக்தி-2026 நிறைவு விழாவில் அமெரிக்க பசிபிக் விமானப்படைத் தளபதியுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். கூடுதல் விபரங்கள் இங்கே:-
நகைச்சுவையான பதில்
விமானத்தின் அருகே கூட எம்மை விடுவதில்லை
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஏ.பி.சிங், "F-35 விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வது பற்றிப் பேசப்பட்ட போதிலும், அமெரிக்கப் படையினர் இந்திய அதிகாரிகளை அந்த விமானத்தின் அருகே கூட அனுமதிக்கவில்லை" என்று நகைச்சுவையான தொனியில் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவுக்கு அமெரிக்காவிடமிருந்து F-35 விமானங்களுக்கான அதிகாரப்பூர்வ சலுகை எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்திய அவர், இந்த விவகாரத்தில் இன்னும் முறையான பேச்சுவார்த்தைகள் எதுவும் தொடங்கவில்லை என்பதையும் உறுதிப்படுத்தினார்.
ரஷ்யா
ரஷ்யாவின் Su-57 விமானங்கள் குறித்த நிலைப்பாடு
ரஷ்யாவின் ஐந்தாம் தலைமுறை Su-57 போர் விமானங்களை பற்றிய கேள்விக்கு பதிலளித்த விமானப்படை தளபதி, "ரஷ்யா தனது Su-57 விமானங்களை வழங்க முன்வந்துள்ளதாக அறிந்துள்ளோம்.
ஆனால், அந்த விமானங்களை ஆய்வு செய்து பரிசீலிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து இந்திய அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை" எனக் குறிப்பிட்டார்.
மத்திய அரசு இதுகுறித்து முடிவெடுத்துத் தெரிவித்தால் மட்டுமே, இந்திய விமானப்படையின் தேவைகளுக்கு அது எந்த அளவிற்கு ஏற்றது என மதிப்பீடு செய்யப்படும் என்றார்.
வான்பயிற்சி
தரங் சக்தி-2026 வான்பயிற்சி நிறைவு
ஜோக்பூரில் வெற்றிகரமாக நிறைவடைந்த தரங் சக்தி-2026 வான்பயிற்சியில் இந்தியாவோடு சேர்த்து எட்டு நாடுகளின் விமானப்படைகள் பங்கேற்றன.
இது தந்திரோபாய ஒத்துழைப்பையும் தொழில்முறை அனுபவப் பகிர்வையும் மேம்படுத்த உதவியது.
அதேவேளையில், இறக்குமதிப் போர் விமானங்களை எதிர்பார்ப்பதைக் காட்டிலும், சுயசார்புப் பாதுகாப்பு உற்பத்தித் திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை தயாரிப்பதில் இந்தியா தீவிரக் கவனம் செலுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.