LOADING...
யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் 5 ஆண்டுகளில் பெண்களின் தேர்ச்சி எண்ணிக்கை இரட்டிப்பானது; மக்களவையில் தகவல்
சிவில் சர்வீசஸ் தேர்வில் 5 ஆண்டுகளில் பெண்களின் தேர்ச்சி எண்ணிக்கை இரட்டிப்பானது

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் 5 ஆண்டுகளில் பெண்களின் தேர்ச்சி எண்ணிக்கை இரட்டிப்பானது; மக்களவையில் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 11, 2025
06:45 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் மிகவும் கடினமான மற்றும் மதிப்புமிக்க தேர்வுகளில் ஒன்றான யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் பெண்கள் மிக வேகமாக முன்னேறி வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தத் தேர்வின் இறுதித் தகுதிப் பட்டியலில் இடம்பிடித்த பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. மத்திய பணியாளர், பொதுமக்கள் குறை தீர்க்கும் மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் அளித்த சமீபத்திய தரவுகளின் மூலம் இந்தச் சாதனை வெளிப்பட்டுள்ளது. நாட்டின் உயர் அரசுப் பணிகளில் பாலினப் பிரதிநிதித்துவம் அதிகரித்து வருவதை இந்தத் தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

பிரதிநிதித்துவம்

பெண்களின் பிரதிநிதித்துவத்தில் நிலையான உயர்வு

2019 இல் 24% ஆக இருந்த பெண்களின் தேர்ச்சி விகிதம், 2023 இல் 35% ஆக உயர்ந்தது. எண்ணிக்கையைப் பொறுத்தவரை 2019 இல், மொத்த தேர்ச்சி பெற்ற 922 பேரில் 220 பேர் பெண்கள். அதுவே 2023 இல், மொத்த தேர்ச்சி பெற்ற 1,132 பேரில் 397 பேர் பெண்கள் ஆவர். ஐந்து ஆண்டுகளில் இந்த வளர்ச்சி நிலையாக இருந்தது. 2020 இல் 238 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், 2021 இல் மொத்த தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்ததால், பெண்களின் தேர்ச்சி விகிதமும் 201 ஆகக் குறைந்தது. எனினும், 2022 இல் 351 ஆகவும், 2023 இல் 397 ஆகவும் எண்ணிக்கை உயர்ந்து, வலுவான ஏற்றம் காணப்பட்டது.

பொறியியல்

பொறியியல் பட்டதாரிகள் ஆதிக்கம் நீடிப்பு

வெற்றி பெற்ற வேட்பாளர்களின் கல்விப் பின்னணி குறித்த தரவுகளும் வெளியிடப்பட்டன. இதில், பொறியியல் பட்டதாரிகளே தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். 2023 இல், 554 பொறியியல் பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றனர். மற்ற துறைகளில் மனிதநேயப் படிப்புகளில் இருந்து 368 பேர், அறிவியல் துறையில் இருந்து 137 பேர், மருத்துவத் துறையில் இருந்து 73 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில், அகில இந்தியப் பணிகள் மற்றும் பிற மத்திய அரசுப் பதவிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களில் பொறியியல் பட்டதாரிகளே தொடர்ந்து பெரும்பான்மையாக உள்ளனர். மேலும், ஒட்டுமொத்த இளங்கலைப் பட்டம் பெற்ற வேட்பாளர்களின் தேர்ச்சி எண்ணிக்கையும் 2019 இல் 672 இல் இருந்து 2023 இல் 848 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement