உலகளவில் எந்தெந்த நாடுகளில் பயன்படுத்தப்படவிருக்கிறது UPI?
இந்தியாவின் பணப்பரிவர்த்தனை தளத்தை கொஞ்சம் கொஞ்சமாக டிஜிட்டலாக மாற்றி வருகிறது யுபிஐ. 2016-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ கட்டண சேவை முறையானது, கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் பெரும் வளர்ச்சி கண்டிருக்கிறது. தற்போது இந்தியாவைக் கடந்து பல உலக நாடுகளிலும் கால்பதித்து வருகிறது யுபிஐ சேவை. 2022-ல் இந்தியாவின் யுபிஐ சேவை பயன்பாட்டை முதன் முதலில் ஏற்றுக் கொண்டது நேபாளம். அதனைத் தொடர்ந்து, பிற நாடுகளில் யுபிஐ பயன்பாட்டை அறிமுகப்படுத்துவதையும் மேம்படுத்துவதையும் NIPL (NPCI International Payments Limited) அமைப்பு மேற்பார்வையிட்டு வருகிறது. நேபாளத்தைத் தொடர்ந்து சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிற்கிடையேயான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை எளிமையாக்கும் நோக்கத்தோடு அந்நாட்டின் பேநவ் சேவையுடன் கூட்டணி அமைத்தது யுபிஐ.
உலக நாடுகளில் யுபிஐ-யின் பயன்பாடு:
சிங்கப்பூரைத் தொடர்ந்து பிரான்ஸ் மற்றும் யுஏஇ-யிலும் யுபிஐ சேவையை அந்நாட்டு பணப்பரிவர்த்தனை சேவைகளுடன் கூட்டமைத்து பயன்படுத்தும் வகையிலான அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேற்கூறிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியர்கள் அதிகம் வாழும் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வடஅமெரிக்க நாடுகளிலும் யுபிஐ சேவையை விரவாக்கம் செய்யத் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு. மேலும், தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா மற்றும் மலேசியா உள்ளிட்ட 13 நாடுகளில் யுபிஐ பயன்பாட்டை அறிமுகப்படுத்துவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தாகியிருக்கின்றன. கடந்த ஜூன் 2023 வரையில், ரூ.14.75 ட்ரில்லியன் மதிப்பிற்கு, 9.33 பில்லியன் அளவிலான யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் சில்லறை வர்த்தக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் 75% யுபிஐ சேவையின் மூலமாகவே மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.