70% ஷாங்காய் மக்களுக்கு கொரோனா வர வாய்ப்பு!
சீனாவில் உள்ள ஷாங்காய் நகரத்தில் வாழும் 70% மக்களுக்கு கொரோனா வர வாய்ப்பிருப்பதாக சீன மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் வரலாறு காணாத அளவு கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அதிக மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் சீன மருத்துவமனைகளும் மயானங்களும் நிரம்பி வழிவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால், சீனாவில் மூன்று வருடங்களாக பின்பற்றப்பட்ட 'ஜீரோ கோவிட்' கொளகைகள் சமீபத்தில் தளர்த்தப்பட்டுள்ளன. மூன்று வருடங்கள் கடுமையான கட்டுப்பாடுகளில் இருந்த மக்கள், பெரும் போராட்டங்களை செய்ததால் இது தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே இருந்ததை விட கொரோனா அதிகமாக பரவ தொடங்கியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சீன மருத்துவ நிபுணர்கள் என்ன கூறுகின்றனர்?
ஷாங்காய் கொரோனா வைரஸ் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான டாக்டர் சென் எர்சென் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: சீனாவில் அதிகம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக, இன்னும் 2 மாதங்களுக்குள் ஷாங்காயில் வசிக்கும் 70% மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம். ஷாங்காயில் கிட்டத்தட்ட 2.5 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் 1.75 கோடி மக்களுக்கு வரும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா பரவலாம். ஷாங்காயில் மட்டும் தினமும் 1,600 பேர் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். 65 வயதுக்கு மேற்பட்ட மக்களையே இந்த கொரோனா அதிகம் பாதிக்கிறது. என்று கூறி இருக்கிறார்.