Page Loader
கடலூரில் இன்று முதல் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம்: முதல் கட்டத்தில் 3,563 முகாம்கள்
இந்த திட்டத்தின் முதல் கட்டமாக 3,563 இடங்களில் முகாம்கள் நடக்க உள்ளன

கடலூரில் இன்று முதல் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம்: முதல் கட்டத்தில் 3,563 முகாம்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 15, 2025
08:58 am

செய்தி முன்னோட்டம்

மக்கள் குறைகளை நேரடியாக கேட்டு தீர்வு காணும் நோக்கில் உருவாக்கப்பட்ட "உங்களுடன் ஸ்டாலின்" என்ற புதிய தலைமைச்செயலாளர் திட்டத்தை, முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் முதல் கட்டமாக 3,563 இடங்களில் முகாம்கள் நடக்க உள்ளன என்று வருவாய் துறை செயலர் மற்றும் அரசின் செய்தித் தொடர்பாளரான அமுதா IAS தெரிவித்துள்ளார். 2021 முதல், முதல்வர் சுற்றுப்பயணங்களில் மக்கள் அளித்த மனுக்களுக்கு, தனி பிரிவுகள் மூலம் தீர்வு வழங்கப்பட்டுள்ளது. '1100' என்ற எண்ணில் சென்னையில் செயல்படும் 'கால் சென்டர்', மற்றும் தலைமைச் செயலகத்தில் இயங்கும் முதல்வரின் தனிப்பிரிவு ஆகியவை, இந்த முயற்சியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதுவரை 1.05 கோடி மனுக்கள் பெறப்பட்டு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

முகாம்கள் 

முகாம்கள் வழியாக நேரடி தொடர்பு

2023 நவம்பர் முதல் 2024 ஜனவரி வரை நகர்ப்புறங்களில் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டு, 9.05 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 2024 ஜூலை முதல் செப்டம்பர் வரை ஊரக பகுதிகளில் நடைபெற்ற 2,304 முகாம்களில், 95% மனுக்களுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டமாக, S.C., S.T. பகுதிகளில் 433 முகாம்கள் நடத்தப்பட்டு, 1.80 லட்சம் மனுக்கள் பெற்றதில் 1.47 லட்சம் தீர்க்கப்பட்டன.

விரிவாக்கம்

மாநிலம் முழுவதும் விரிவாக்கம்

இன்று முதல் நவம்பர் வரை மொத்தமாக 10,000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நகரப்பகுதிகளில் 3,768, ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்கள் இடம்பெறும். முதல் கட்டமாக ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரை, 3,563 முகாம்கள் நடத்தப்படும்: நகரங்களில் 1,428, ஊரகங்களில் 2,135 முகாம்கள்.

சேவைகள்

தன்னார்வலர்கள் மூலம் பொதுமக்களுக்கான சேவை முகாம்கள்

இந்த திட்டத்தில், 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வீடு வீடாக சென்று திட்டத்தை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகாம்களில் 13-15 துறைகளின் கீழ், 43-46 வகையான சேவைகள் வழங்கப்படும். பட்டா, ஆதார் திருத்தம், ரேஷன் கார்டு மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த மனுக்களுக்கு சில நேரங்களில் அன்றே தீர்வு வழங்கப்படும். மேலும், அனைத்து மனுக்களுக்கும் 45 நாட்களில் தீர்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முகாம்களில் குடிநீர், கழிப்பறை, ஓய்வு இடங்கள் போன்ற வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், "உங்களுடன் ஸ்டாலின்" என்ற இணையதளமும் இன்று அறிமுகமாகி, ஒரு மாதத்திற்கான முகாம்களின் நிரலையும் வெளியிடும்.