Loading...
தவெக ஆட்சியில் சட்டம் இருக்கு; ஒழுங்கு இல்லை: ரமணா பாணியில் புள்ளிவிவரத்தோடு சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை மிகக் கடுமையாக விமரித்துப் பேசினார்

தவெக ஆட்சியில் சட்டம் இருக்கு; ஒழுங்கு இல்லை: ரமணா பாணியில் புள்ளிவிவரத்தோடு சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 03, 2026
01:45 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை மிகக் கடுமையாக விமரித்துப் பேசினார். தவெக அரசு அமைந்து 116 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய திட்டங்களை கொண்டு வருவதற்கு பதிலாக முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முக்கியத் திட்டங்களை முடக்குவதிலேயே அரசு கவனம் செலுத்துவதாக குற்றம்சாட்டினார். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், "தவெக ஆட்சியில் சட்டம் இருக்கிறது; ஆனால் ஒழுங்கு இல்லை. கடந்த காலத்தில் குற்றச் சம்பவங்களுக்கு அரசே காரணம் எனக் கூறியவர்கள், தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு தனிநபர்கள்தான் காரணம் என மக்களுக்குப் பாடம் எடுக்கிறார்கள்" என்றார்.

திட்டங்கள் முடக்கம்

"தமிழ்நாடு ரிவர்ஸ் கியரில் செல்கிறது"

"பரந்தூர் விமான நிலையம், காஞ்சிபுரம் புதுநகர் திட்டம், குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி, நாமக்கல் சிப்காட், பரந்தூர் மெட்ரோ, ஈசிஆர் மேம்பாலம் போன்ற பல்வேறு திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன".

"இதன் மூலம் தவெக ஆட்சியில் தமிழ்நாடு முன்னோக்கி செல்லாமல் 'ரிவர்ஸ் கியரில்' பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது எனச் சாடினார்.

"ஆட்சி அமைந்த இந்த 116 நாட்களில் 10 ஆணவ கொலைகளும், 8 காவல் நிலைய மரணங்களும் நடந்துள்ளன. தவெக ஆட்சி அமைந்த நாள் முதல் கொலைகள் நடக்காத நாட்களே இல்லை".

தவெக அரசின் ஒட்டுமொத்த திட்டங்களுக்கும் சேர்த்து "தாய்மாமன் காது குத்தும் திட்டம்" என்று தான் பெயர் வைக்க வேண்டும் என எள்ளலாக விமர்சித்தார்.

முதல்வர் பதில்

துறைசார்ந்த கேள்விகளுக்கு முதல்வர் பதில்

எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, முதல்வர் விஜய் பதிலளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு காரணமாக, சட்டம் ஒழுங்கு துறை முதல்வரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இருப்பதனால், முதல்வர் பதிலளிப்பதே ஏற்புடையதாக இருக்கும் என கூறப்பட்டது.

இதனையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்த இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, முதலமைச்சர் விஜய் அனைத்துக் கருத்துக்களையும் கூர்ந்து கவனித்து வருவதாகவும், வரும் திங்கட்கிழமை பேரவையில் அவர் விரிவான பதிலுரை வழங்குவார் என்றும் பேரவைத் தலைவர் JCD. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT