Page Loader
அமைச்சராகப் பதவியேற்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்!
தமிழக முதல்வருடன் உதயநிதி ஸ்டாலின்! (படம்: உதயநிதியின் ட்விட்டர் பக்கம்)

அமைச்சராகப் பதவியேற்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்!

எழுதியவர் Sindhuja SM
Dec 14, 2022
11:23 pm

செய்தி முன்னோட்டம்

எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நாளை (டிச. 14) தமிழக அமைச்சராகப் பதவியேற்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார். அமைச்சரவை விரிவாக்கப்படுவதை ஒட்டி உதயநிதி ஸ்டாலினுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மையைப் பிடித்து ஆட்சி அமைத்தது. இந்த தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்.எல்.ஏவாக வெற்றிபெற்றார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பிற அமைச்சர்களும் பதவி ஏற்கும் போதே உதயநிதி ஸ்டாலினுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதற்கு மு.க.ஸ்டாலின் மௌனம் காத்துவிட்டார். இதன்பின், உட்கட்சி தேர்தல்கள் முடிந்து உதயநிதி மீண்டும் இளைஞரணிச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார்.

பதவி ஏற்பு

உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு!

அப்போது, அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவந்தனர். சமீபத்தில், அமைச்சர் பதவி பற்றி உதயநிதி ஸ்டாலினிடம் நேரடியாகக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "அதை முதல்வர் தான் முடிவெடுப்பார்" என்று தெரிவித்தார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்க்க ஒப்புதல் அளித்த முதல்வர் ஸ்டாலின், அதை ஆளுநர் மாளிகைக்குப் பரிந்துரைத்துள்ளார். இந்த பதவியேற்பு விழா நாளை காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் 400 பேர் பங்கேற்கின்றனர். இதற்கிடையில், உதயநிதி ஸ்டாலினுக்கான அறை தலைமைச் செயலகத்தில் தயாராகி வருவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இவருக்கு எந்த துறையில் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்பதும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.