Loading...
'2029-ல் விஜய்யை பிரதமராக்குவதே ராகுல் காந்திதான்': தவெக எம்.எல்.ஏ கனிமொழி ஜோசியம்
நாடாளுமன்றத் தேர்தலில் விஜய் நாட்டின் பிரதமராவார் என தவெக எம்.எல்.ஏ கனிமொழி தெரிவித்துள்ளார்

'2029-ல் விஜய்யை பிரதமராக்குவதே ராகுல் காந்திதான்': தவெக எம்.எல்.ஏ கனிமொழி ஜோசியம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 02, 2026
11:09 am

செய்தி முன்னோட்டம்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், 2029 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் நாட்டின் பிரதமராவார் என தவெக எம்.எல்.ஏ கனிமொழி தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான 'மூட் ஆஃப் தி நேஷன்' கருத்துக்கணிப்பில் நாட்டின் அடுத்த பிரதமர் ரேஸில் விஜய்க்கு 9.2% ஆதரவு இருப்பதாகத் தகவல்கள் வெளியானதை அடுத்து இத்தகைய விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. புகைச்சலில் இருக்கும் காங்கிரஸ் கட்சியினர் இதனால் மீண்டும் கொந்தளிக்க துவங்கியுள்ளனர்.

தேசிய அரசியல்

தவெகவின் தேசிய அரசியல் நகர்வுகள்

தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள தவெக, தனது அரசியல் எல்லையை தேசிய அளவில் விரிவாக்கம் செய்யும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

வடமாநிலங்கள் மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் சமூக வலைத்தளங்கள் வாயிலாக முதல்வர் விஜய்யின் உரைகள் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பரப்பப்பட்டு வருகின்றன.

விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக தவெக நிர்வாகிகள் முன்னிறுத்தி வருவது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கத் தவறினால் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்யத் தயங்கமாட்டோம் என அமைச்சர் ராஜேஷ்குமார் எச்சரித்துள்ளார்.

இதேபோல் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து இது குறித்துப் பேசிய போதிலும் தவெகவினரின் கருத்துகள் குறைந்தபாடில்லை.

ஆருடம்

MLA கனிமொழியின் ஆருடம்

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தவெக எம்.எல்.ஏ கனிமொழி, 2029 ஆம் ஆண்டின் பிரதமரை டெல்லி தீர்மானிக்காது, தமிழ்நாடே முடிவு செய்யும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2026-ல் விஜய் முதலமைச்சராக வழிவகுத்தது போல, 2029-ல் ராகுல் காந்தியே விஜய்யின் கரங்களை பிடித்து அவரை பிரதமர் நாற்காலியில் அமர வைப்பார் என்றும், அப்போது தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார்.

கனிமொழியின் இந்த கருத்து காங்கிரஸ் மேலிடத்திற்கு மேலும் சங்கடத்தை உருவாக்கியுள்ள சூழலில், தவெக - காங்கிரஸ் கூட்டணியின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் தற்போது தீவிரமடைந்து வருகின்றன.

ADVERTISEMENT