Loading...
இந்திய விமானப்படை சாதனை: ஏர் வைஸ் மார்ஷலாக பதவியேற்ற முதல் பெண் அதிகாரி சக்தி சர்மா
ஏர் வைஸ் மார்ஷலாக பதவியேற்ற முதல் பெண் அதிகாரி சக்தி சர்மா

இந்திய விமானப்படை சாதனை: ஏர் வைஸ் மார்ஷலாக பதவியேற்ற முதல் பெண் அதிகாரி சக்தி சர்மா

எழுதியவர் Venkatalakshmi V
Sep 02, 2026
10:04 am

செய்தி முன்னோட்டம்

இந்தியப் பாதுகாப்புப் படைகளின் வரலாற்றில் புதிய மைல்கல்லாக, மருத்துவத் துறை சாராத பிரிவிலிருந்து ஏர் வைஸ் மார்ஷல் (இரண்டு நட்சத்திர அந்தஸ்து) பதவிக்கு உயர்ந்துள்ள முதல் பெண் அதிகாரி என்ற மாபெரும் சாதனையை ஏர் வைஸ் மார்ஷல் சக்தி சர்மா படைத்துள்ளார். இவர் விமானப்படைத் தலைமையகத்தில் கல்விப் பிரிவின் உதவித் தலைமைத் தளபதியாகச் செப்டம்பர் 1 பொறுப்பேற்றுக்கொண்டார். 1994ஆம் ஆண்டு இந்திய விமானப்படையின் கல்விப் பிரிவில் இணைந்த சக்தி, பயிற்சி மையங்கள், கள நிலையங்கள் மற்றும் கட்டளைத் தலைமையகங்களில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறப்பான சேவையாற்றியுள்ளார். ஐஐடி கான்பூர் மற்றும் புனே பல்கலைக்கழகங்களில் பாதுகாப்புத் துறை சார்ந்த ஆராய்ச்சிகளுக்காக விமானப்படையின் சிறப்பு இருக்கைகளை அமைப்பதில் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

வரலாறு

சைனிக் பள்ளி முதல்வராக பொறுப்பேற்ற முதல் பெண் அதிகாரி

முப்படைகளையும் சேர்ந்த அதிகாரிகளில், சைனிக் பள்ளி ஒன்றின் முதல்வராக பொறுப்பேற்ற முதல் பெண் அதிகாரி என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.

கபுர்தலா சைனிக் பள்ளியில் இவர் முதல்வராகப் பணியாற்றி, பாதுகாப்புப் படை அதிகாரிகளாக வரத் துடிக்கும் இளம் தலைமுறையினரை வழிநடத்தியுள்ளார்.

ஏர் வைஸ் மார்ஷல் சக்தி சர்மாவின் இந்தப் பதவி உயர்வு இந்தியப் பாதுகாப்புப் படைகளில் பெண் அதிகாரிகளின் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் பெருமிதம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, 2022 ஆம் ஆண்டில் மருத்துவத் துறையை சேர்ந்த ஏர் மார்ஷல் பத்மா பந்தோபாத்யாய் ஏர் வைஸ் மார்ஷல் பதவிக்கு உயர்ந்த முதல் பெண் அதிகாரி என்ற சிறப்பைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT