தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி குதிரை பேரம்: செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் மீது FIR பதிவு
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னரும், மாநில அரசியல் களம் குதிரை பேரப் புகார்களால் பெரும் பரபரப்பை சந்தித்து வருகிறது. தற்போதைய ஆட்சிக்கு முழுமையான பெரும்பான்மை கிடைக்காத நிலையை பயன்படுத்தி, தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்க எதிர்க்கட்சிகள் முயல்வதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் உச்சக்கட்டமாக, ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசி, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் ஐபிடிஎஸ் கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
FIR விவரம்
கைதான 5 பேர் மற்றும் எப்ஐஆர் விவரம்
தவெக MLA இளையராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில், ஐபிடிஎஸ் நிறுவனத்தின் திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன், செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான திமுக நிர்வாகி கார்த்தி, ரமேஷ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகள், அரசாங்க அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயலுதல், குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 கடுமையான பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அசோக் குமாரை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
டீல்
வாட்ஸ்அப் காலில் வந்த ரூ.35 கோடி டீல்
வெளியாகியுள்ள காவல் துறையின் FIR-படி, கடந்த ஜூன் 26ஆம் தேதி காலை ஐபிடிஎஸ் நிறுவனத்தின் திருநாவுக்கரசு, எம்.எல்.ஏ இளையராஜாவை தொடர்பு கொண்டு ஒரு முக்கிய விஷயத்திற்காக நேரில் சந்திக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு இளையராஜா மறுக்கவே, அன்றிரவு மீண்டும் வாட்ஸ்அப் மூலம் அழைத்த திருநாவுக்கரசு, "திமுகவின் மூத்த நிர்வாகி சொல்லித்தான் பேசுகிறேன். தற்போதைய ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது; எங்கள் தயவு இல்லாமல் இந்த ஆட்சி நிலைக்காது. எனவே வரவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நாங்கள் சொல்வது போல நீங்கள் நடந்துகொண்டால் ரூ.35 கோடி தரத் தயாராக இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
மிரட்டல்
குடும்பத்திற்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்
மேலும் அந்த எப்ஐஆரில், "இந்த விவகாரத்தை யாரிடமாவது கூறினால் உங்கள் குடும்பத்தினர் யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள். நீங்கள் இந்த டீலுக்குச் சம்மதித்தால், அடுத்தகட்டமாக நரேன் கிருஷ்ணன் மற்றும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் ஆகியோர் உங்களை நேரில் சந்தித்து அனைத்துப் பணப் பரிவர்த்தனைகளையும் கவனித்துக் கொள்வார்கள்" என்று திருநாவுக்கரசு மிரட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ள சூழலில், ஆளும் கட்சி எம்.எல்.ஏ ஒருவரையே கோடிக்கணக்கில் பணம் கொடுத்து இழுக்க முயன்ற சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.